’சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம்’ எனும் தங்களின் முடிவை மீண்டும் இன்று அழுத்தம் திருத்தமாக அறிவித்துவிட்டது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் அரசு. இதனால் கொதித்துக் கிடக்கிறது சபரிமலை பக்தர்கள் உலகம். 

மார்க்சிஸ்ட் அரசின் இந்த முடிவுக்கு எதிராக கேரள மக்களின் கொந்தளிப்புக்கு சற்றும் குறைவில்லாத வகையில் தமிழகத்திலும் கடும் எதிர்ப்புகள் பொங்கிக் கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி. இந்த உத்தரவுக்கு எதிராக தார்மீக ரீதியில் என்னென்ன போராட்டங்களையும், ஆர்பாட்டங்களையும், எதிர்கோஷங்களையும் கிளப்பிட முடியுமோ அதையெல்லாம் குறைவின்றி கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

அதிலும், அக்கட்சியின் தேசிய  செயலரான ஹெச்.ராஜா இடியாய்தான் முழங்குகிறார் பினராயி அரசுக்கு எதிராக, “பத்து முதல் 50 வயது வரையிலான பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவு அரசியலமைப்பு சட்டத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக இல்லை. எனவே இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கில் சீராய்வு மனுக்கள் தாக்கியுள்ளன. 

ஆனால் நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி, ரஹானா போன்றோரை சபரிமலைக்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல கம்யூனிஸ்ட் அரசு முயற்சிக்கிறது. சபரி மலையின் புனிதத்தை கெடுக்க அம்மாநில முதல்வர் பினராயின் விஜயன் சதி செய்கிறார். 

ஒரு கொலை வழக்கில் முதல் குற்றவாளிதான் இந்த பினராயி. ஆனால் முதல்வர் பதவி அதிகாரத்தில் அதிலிருந்து தப்பியிருக்கிறார். அவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி என்ன செய்ய முயன்றாலும், இறுதியில் இந்து மக்களின் உணர்வே வெல்லும்!” என்று பொங்கி, வெளுத்துக் கட்டியிருக்கிறார். 

நீதிமன்ற தீர்ப்பு என்ன சொல்லப்போகிறதோ!?

இதற்கிடையில் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்க கேரள அரசு விடாப்பிடியாய் முடிவெடுத்திருக்கும் நிலையில், சீசன் துவங்கியதும் என்னென்ன களேபரங்கள் உருவாக காத்திருக்கிறதோ தெரியவில்லை.