கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த மாதம் 28-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. , இதையடுத்து ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்து அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது.

ஆனால், தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் மற்றும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன், கவிதா என்ற பெண் பத்திரிக்கையாளரும்,  பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் சபரிமலை சன்னிதானத்தின் வந்தபோது அவர்களுக்குப் போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காலை 2 பெண்கள், ஆண் பக்தருடன் சபரிமலை செல்லும் பாதையில் போலீஸார் பாதுகாப்பு ஏதுமின்றி ஏறிவந்தனர். ஆனால், இதைப் பார்த்த போராட்டக்காரர்களும், பக்தர்களும் எதிர்ப்புத் தெரிவித்து, கோஷமிட்டு அந்த பெண்களைச் சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு திருப்பி அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து மற்றொரு பெண், சபரிமலை செல்லும் பிரதான மலைப்பாதையில்நடந்து சென்றார். அவரைப் பார்த்த போராட்டக்காரர்கள் அந்தப் பெண்ணை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பி, வயது சான்று, ஆதார் அட்டையைக் கேட்டனர். அந்தப் பெண்ணுக்கு 47வயதுதான் ஆகி இருந்தது என்பதால், அந்தப் பெண்ணை போராட்டக்கார்கள் தாக்கினார்கள். இதையடுத்து அங்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மேலும் ஒரு பெண் சபரிமலை கோயில் சன்னிதானத்துக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவு வரை வந்துவிட்டார். அவரைப் பார்த்த போராட்டக்கார்கள் மேற்கொண்டு அந்தப் பெண் செல்லமுடியாமல் தடுத்தனர். இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததும் அங்கு வந்த போலீஸார் அந்தப் பெண்ணை அங்கிருந்து பம்பைக்கு பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்