கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ள நிலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக  இரண்டாவது முறையாக கோவில்  இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கேரளாவைச் சேர்ந்த ரெஹானா ஃபாத்திமா, பெண் பத்திரிக்கையாளர் கவிதா ஆகியோர் கோவிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. 

இதையடுத்து இன்று  கோவில் திறக்கப்பட்ட  நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா ஆலப்புழா மாவட்டம் செர்தலாவை சேர்ந்த அஞ்சலி என்ற  26 வயது பெண் சபரிமலை வந்துள்ளார். கோவிலுக்கு செல்ல பாதுகாப்பு கேட்டு பம்பா காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் முகாமிட்டுள்ளார். அவருடன் கணவர் மற்றும் இரு குழந்தைகளும் வந்துள்ளனர்.

அனைத்து பக்தர்களும் 'தரிசனம்' செய்வதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளோம். இந்த பகுதியில் பல்வேறு அச்சுறுத்தல்கள் உள்ளன, பல்வேறு அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, எல்லோருக்கும் பாதுகாப்பு வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்று ஐஜி அஜீத் குமார் தெரிவித்துள்ளார்.