சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் நுழைய அனுமதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது முதல் சபரிமலை பரபரப்புக்கு உள்ளாகி கேரளாவில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் இரு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

சபரிமலைக்கு பெண்கள் வர முயற்சி செய்யும் நிக்ழவுகள் அடிக்கடி அரங்கேறி வரும் நிலையில், பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், இன்று சபரி மலை வர முயன்ற மேலும் 2 பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கேரளாவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்று காலை இரு பெண்கள் சபரிமலை செல்வதற்காக நிலக்கல் அடிவார முகாம் வந்தடைந்தனர். அங்கிருந்து அவர்கள் கோவில் நோக்கி புறப்பட முயன்றனர். அப்போது பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

பம்பையில் அய்யப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் திரும்பி செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து இரண்டு பெண்களும் திரும்பிச் சென்றனர். இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுவரை 7,564 பெண்கள் சபரிமலை கோயிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் வரிசைப்படி 51 பெண்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சன்னிதானத்தை அடைந்தார்களா? வழிபட்டார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது என தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதும் ஐயப்ப பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.