கேரளாவில் நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் தோல்வியடைந்ததற்கு சபரிமலை கோயில் விவகாரம் காரணம் அல்ல என்று மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் உள்ள 20  தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆலப்புழா தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அதுவும் நீண்ட இழுபறிக்கு பிறகு 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றது. மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே இடதுசாரிகள் கரைந்துவிட்ட நிலையில்,  கேரளாவும் கைகொடுக்காமல் போனதால், அக்கட்சி மிகப் பெரிய பின்னடை சந்தித்துள்ளது.


ஆலப்புழா தவிர தமிழகத்தில் வென்ற கோவை, மதுரை தொகுதிகளைச் சேர்த்து மொத்தமே 3தொகுதிகளை மட்டுமே மார்க்சிஸ்டுகள் வென்றுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட தோல்வி குறித்து, காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்றது குறித்தும் மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.


அப்போது அவர், “தற்போது நடந்து முடிந்திருப்பது  நாடாளுமன்றத் தேர்தல்தான். சட்டப்பேரவை தேர்தல் அல்ல. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என்றும், ராகுல் பிரதமராக வருவார் என்று கருதியும் மக்கள் வாக்களித்துள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் ராகுல் வயநாட்டில் போட்டியிட்டதும்கூட அக்கட்சி தொகுதிகளில் வெல்ல ஒரு காரணம்.


தேர்தலில் சபரிமலை விவகாரம் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அந்த விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் பாஜகவுக்கு பலன் கிடைத்திருக்கும். சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியை பாஜக வெற்றி பெற்றிருக்கும். ஆனால், ஆக்கட்சி அங்கே மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே தேர்தல் தோல்விக்கு சபரிமலை கோயில் விவகாரத்தில் அரசின் அணுகுமுறை காரணம் அல்ல” என்றார்.