* எங்களை அமைச்சராகவும், முதலமைச்சராகவும் வைத்து அழகு பார்த்த அம்மா, தெய்வமாக இருந்து எங்களைக் கண்காணிக்கிறார். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோமா அல்லது கெடுதல் செய்கிறோமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்படி இருக்கும்போது நாங்கள் தவறு செய்வோமா?: ஓ.பன்னீர்செல்வம். (தலீவரே, இந்த டயலாக்கை நீங்க பேசிட்டு இருந்த இடம் மதுரை - தூத்துக்குடி ஹைவை பைபாஸ். அரை மணி நேரமா, தேசிய நெடுஞ்சாலையை மறிச்சு, மக்களை வதைச்சு பிரசாரம் பண்றதுக்கு பேருதான் உங்க ஊர்ல ‘மக்களுக்கு நல்லது பண்றதா?’)

* மே 23-க்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி! எனும் நம்பிக்கையில் அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பலர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை ரகசியமாய் சந்தித்து மரியாதை வைக்க துவங்கியுள்ளனர்: செய்தி. (இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதானே எல்லா கட்சிக்காரன் முதுகையும் புண்ணாக்குறாய்ங்க. இதே டீம்தான் எடப்பாடியாரிடமும் ‘தலைவரே மே 23-க்கு பிறகும் உங்க ராஜ்ஜியம்தான்.’ன்னு சாக்லேட் கொடுத்து சால்ரா தட்டியிருக்கு. அதை முடிச்சுட்டுதான் நேரா சபரிக்கிட்ட வந்திருப்பாய்ங்க.)

* தமிழக பி.ஜே.பி.யை பொறுத்தவரைக்கும் நான் ரொம்பவே ஜூனியர். ஆனாலும் என்னை மதித்து, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது கட்சி. அதற்கு நன்றி உடையவனாகவே எப்போதும் இருப்பேன்: நயினார் நாகேந்திரன். (ரொம்ப உணர்ச்சிவசப்படாதீங்க அண்ணே. ’என்னை  மதிச்சு’ன்னு சொல்றதைவிட ’என் கையில்  இருக்கிற  இருக்குற மாளவே மாளாத சொத்தை மதிச்சு சீட் கொடுத்தாங்க’ன்னு சொல்லிப்பாருங்க. கணக்கு கரெக்டா வரும்)

* நான் தென்சென்னை அல்லது நெல்லையில் நிற்க விரும்பினேன். ஆனால் அதெல்லாம் அ.தி.மு.க.வுக்கு போனதால் நான் தூத்துக்குடியில் நின்றேன். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெல்வேன்: தமிழிசை (இப்படி வெளிப்படையா பேசுறதுக்கும் ஒரு தகிரியம் வேணும். ஆனாலும் பல அதிருப்திகளை சொல்லி அப்புறமா ‘குறைந்த வாக்கு வித்தியாசத்தில்’ன்னு சொல்றதை பார்த்தா அக்கா எதையோ அட்வான்ஸ்டா சொல்ல வர்ற மாதிரி தெரியுதே?)

* சிறை மீண்ட பின் தியாகத்தலைவி சின்னம்மாவிடம் அ.தி.மு.க. முழுமையாக வந்தடையும் சூழல் வந்தால், அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆட்சி நடத்த வழி காட்டுவார். காரணம், இன்னும் பத்து ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது: பெங்களூரு புகழேந்தி. (சசி, பத்து வருஷம் போட்டியிட முடியாதா? இன்னொரு முறை சொல்லுங்க, அட இன்னொரு முறை சொல்லுங்க. ஆக ராஜமாதா சசிகலா, ஆட்சிக்கு வழிகாட்டிட பராக் பராக்!-ன்னு சொல்லுங்க)