அமெரிக்க தடுப்பூசிகளை காட்டிலும் கொரோனாவுக்கு எதிராக ரஷ்ய நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள தடுப்பூசிகள் விலை மலிவானது என்றும் இந்திய தட்ப வெப்ப நிலைக்கு உகந்தது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய முன்னணி மருந்து நிறுவனமான ஹெட்டெரோ,  ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமும் இணைய்து இந்தியாவில் அடுத்த ஆண்டுக்குள் பத்து கோடிக்கும் அதிகமான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்கொல்லி வைரசிலிருந்து மீள முடியாமல் உலகநாடுகள் தவித்து வருகின்றன. இந்நிலையில் வைரஸை தடுத்து நிறுத்துவதற்காக, இந்தியா உள்ளிட்ட பல முன்னணி நாடுகள் தடுப்பூசி உருவாக்கி அதை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து வருகின்றன. இதில் இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ரா ஜெனேகா என்ற மருந்து நிறுவனமும் இணைந்து கோவிஷீல்ட் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த தடுப்பூசியை புனைவை சேர்ந்த சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் தயாரித்து விநியோகிப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது. 

முன்னதாக உலகின் முதலாவது கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வியை தயாரித்து கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யா அறிவித்தது. தற்போது அதற்கான இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருகிறது. இந்த தடுப்பூசி அங்கே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது, அதில் சாதகமான முடிவுகள் கிடைத்துள்ளது. ரஷ்ய மருந்து ஆராய்ச்சி அமைப்பான கமலேய மையமும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியமும் இந்த தடுப்பூசி நல்லதொரு செயல்திறனை கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக அதன் செயல்திறனும் 91.4 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அமெரிக்க தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் ரஷ்யாவின் உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி  விலை மலிவானது எனவும், இந்திய தட்பவெப்ப நிலைக்கு உகந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமான ஹைதராபாத்தின் ஹெட்டெரோ -ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

அதாவது இந்த ஒப்பந்தமானது ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி தயாரிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிவிடும் என்றும், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார். தடுப்பூசி இந்திய மண்ணில் ரஷ்ய தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் மற்றும் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.