அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்றும் ஆட்சி தானாகவே கவிழும் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ்., அணிகள் நாளை இணைவதாக இரு அணியினரும் கூறி வருகின்றனர். அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

பேரம் படிந்ததால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., அணிகள் இணைகின்றன என்ற டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கருத்து தெரிவித்திருந்தார்.

மறைந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசு நினைவிடம் ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதற்கு ஜெயலலிதாவின் சகோதரரின் மகன் தீபக் மற்றும் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரத் தேவையில்லை என்றும் ஆட்சி தானாகவே கவிழும் என்றும் கூறினார்.

தனியாருக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைத்த நேரத்தில் எடுத்துக் கொள்ள முடியாது என்றார். அமித்ஷா தமிழகம் வந்தாலும் பாஜக தோல்வியைத்தான் சந்திக்கும் என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.