Rule 110 announcementsare well thought out Edapadi Palanisami
சந்திரமுகியாகிறாரா எடப்பாடியார்?!...ஹூம், செய்யும் வகையில் ரிலையபிள் தகவல்கள் இருக்கத்தானே வேண்டும்.
அதென்ன, எடப்பாடியார் எப்டி அப்டியாவார்! எப்டி எப்டி எப்டி? என்று புருவத்தை உயர்த்துபவர்கள், விஷயத்துக்குள் நுழையும் முன் ’சந்திரமுகி’ படத்தின் அந்த உயிர்நாடி டயலாக்கை ஒரு முறை பார்த்துவிடலாம்.
ஜோதிகா சந்திரமுகியாக மாறிய கதையை பிரபுவிடம் சொல்லும் ரஜினி...
‘கங்கா சந்திரமுகி ரூமுக்கு போனா!
கங்கா சந்திரமுகியா நின்னா!
கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சுக்கிட்டா!
கங்கா சந்திரமுகியாவே மாறினா’
- என்று தன் காந்தக்குரலில் விவரிப்பார். படத்தின் கிளாஸ் காட்சி அது.
இதைச் சொல்லித்தான் எடப்பாடியாரை ரகசியமாக கிண்டலடிக்கிறார்கள் கோட்டையில் அமைச்சர்களும், அதிகாரிகளும்.
காரணம்? வெரி சிம்பிள்!...
ஜெயலலிதாவால் சுய உணர்வுடன் மிக நேரடியாக முதல்வர் நாற்காலியில் இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் அமர்த்தப்பட்டவர் பன்னீர் செல்வம். ஆனால் அந்த அதிகாரத்தை தன் மண்டையில் ஏற்றிக் கொண்டதேயில்லை பன்னீர். பருவப்பெண் போல குனிந்த தலை நிமிராமல் வந்து போகும் முதல்வராகவே வாழ்ந்தார். அதனால்தான் தமிழகத்தின் குக்கிராமங்களில் ஜட்டி கூட போடாமல் ஓடும் குட்டிப்பயலுக கூட அவரை ‘மிஸ்டர் பணிவு’ என்று நையாண்டி செய்வார்கள்.

ஆனால் ஜெயலலிதா மறைந்து, கழகம் இரண்டாக பிளந்து, சசியும் ஜெயிலுக்கு செல்லும் மிக இக்கட்டான சூழலில் எடப்பாடியாரை முதல்வர் நாற்காலியில் அமர்த்தினார்கள். துவக்கத்தில் பழனியும் பன்னீரைப்போலவே செம பணிவாகத்தான் முதல்வர் வாழ்க்கையை துவக்கினார்.
ஆனால் போகப்போக சூழல் மாறிவிட்டது என்கிறார்கள். கோட்டையில் முதல்வர் அறைக்குள் நுழைந்து அந்த இருக்கையில் பழனிச்சாமி அமர்ந்தபோது ‘அம்மா உட்கார்ந்த சீட்லேயே உட்கார்ந்துட்டாரேய்யா!’ என்று தெறித்தனர் அ.தி.மு.க.வினர் (கங்கா சந்திரமுகி ரூமுக்கு போயிட்டாளா!).
முதல்வர் ஜெயலலிதா போல் தமிழகத்தின் பல திட்டங்களை அந்த துறையின் அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் உடனிருக்க வீடியோ கான்ஃப்ரன்ஸிங் முறையில் திறந்து வைத்தார் பழனிச்சாமி (கங்கா சந்திரமுகியா நின்னுட்டாளா!)
அடுத்து அரசு விளம்பரங்களிலும், தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களில் அமைச்சர்கள் வைக்கும் ஃபிளக்ஸ் பேனர்களிலும் ஜெயலலிதாவின் படத்துக்கு இணையான சைஸில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் வைக்கப்படுகிறது. கூடவே இப்போது அமைச்சர்களின் அறைகளில் பழனிச்சாமியின் படம் வைக்கப்படுவதும் சூட்டைக் கிளப்பியிருக்கிறது. (கங்கா சந்திரமுகியா தன்னை நினைச்சுக்கிட்டாளா!)
இறுதியாக இன்று மாலை 3 மணிக்கு கோட்டையில் முதலவர் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வரும் 14-ம் தேதி கூட இருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடர் பற்றி விவாதிப்பதோடு, எதிர்கட்சிகளை எப்படி சமாளிக்கலாம் என்பது பற்றியும் ஆலோசிக்க இருக்கிறார்கள்.
கூடவே சும்மாவே கதகளியாடும் எதிர்கட்சிகள், அ.தி.மு.க. இப்படி சிதறிக்கிடக்கும் நிலையில் ஓவர் ரவுசுவிடுவார்கள் என்பதால், அரசின் பல திட்டங்களை 110 விதியின் கீழ் வெளியிடலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்போகிறார்களாம் இன்று. 110 விதியின் கீழ் எந்த குறுக்கீடும் இல்லாமல், கேள்விகளும் இல்லாமல் திட்டங்களை தாறுமாறாக அறிவித்துவிட்டு எழுந்து போய்க்கொண்டே இருப்பது ஜெயலலிதாவின் ஸ்டைல் அதைத்தான் எடப்பாடி கையிலெடுக்க நினைக்கிறார் என்கிறார்கள். (கங்கா சந்திரமுகியாவே மாறிட்டாளா!)

இதுதான் விவகாரம். ஆக முதல்வர் எடப்பாடி மெதுவாக தன்னை அம்மா போலவே நினைத்து அதிகாரம் காட்ட ஆரம்பிக்கிறார் என்று பன்னீர் டீம் சாடியது இந்த பின்னணியில்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
ஆனால் எடப்பாடியின் தரப்போ ‘இப்படியான விமர்சனமெல்லாம் ஹம்பக். ஒரு முதல்வராக தன்னுடைய அதிகார எல்லைக்குட்பட்ட விஷயங்களை, வாய்ப்புகளை அவர் பயன்படுத்தி அரசு இயந்திரத்தை நகர்த்துறார். சர்வாதிகாரமாக புது விதி எதையும் அவர் உருவாக்கிக்கலையே!’ என்று பல்லை கடிக்கிறார்கள்.
பாஸ் நீங்க சந்திரமுகியானா என்ன? கபாலியானா எங்களுக்கென்ன! நாட்டை நலமா வாழ வெச்சா போதும்...என்று பொறுமுகிறான் அப்பாவி தமிழன்.
