மாற்றார் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய அண்ணா ஆரம்பித்த இயக்கம் ஆணவத்தில் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும் என மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது. 

சென்னை அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் கூட்டத்தில் பேசிய திமுக அமைப்புச் செயலாளரும் எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி பல சர்ச்சையான கருத்துகளைப் பேசினார். மீடியாக்கள் உள்பட பல அவதூறான கருத்துகளை வெளிப்படுத்தினார். தலித் சமுதாயத்துக்கு பதவி உயர்வு கலைஞர் போட்ட பிச்சை என்றும் பேசியதாகவும் தகவல் வெளியானது. இவரது இந்த ஆணவ பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. 

இந்நிலையில், இது தொடர்பாக, அக்கட்சியின் ஆதி திராவிடர் நல அணியின் மாநிலச் செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அண்ணல் அம்பேத்கர் பெற்றுத் தந்த உரிமையில் நிமிர்ந்தெழுந்தது ஒடுக்கப்பட்ட இனம். அவர் ஒடுக்கப்பட்ட இனத்திற்கு மட்டுமல்ல, வர்ணாசிரமக் கொடுமையில் சிக்கியிருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் வழிகாட்டியவர்.

இதையும் படிங்க;-  மண்டியிட்டு பிழைக்கும் உங்களைத்தான் நாய் என்று அழைக்க வேண்டும்... திமுகவுக்கு பதிலடி கொடுத்த பாஜக..!

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நினைத்தாலும் அதில் கை வைத்திருக்க முடியாது. அப்படியிருக்கையில் சட்டம் கொடுத்த வாய்ப்பை பிச்சை போட்டதாக திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அந்தக் கால 'ஜமீன் தனத்தோடு' ஆணவமாகக் கருத்து கூறியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தனது கட்சி செயலாளர் கூறிய கருத்து மு.க.ஸ்டாலினுக்கு மிகச் சாதாரணமான ஒன்றாகத் தோன்றியிருப்பது வருந்தத்தக்கது. ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்தால் போதுமானது என்று நினைத்திருப்பது கண்டனத்திற்குரியது.

இதேநேரத்தில் திமுகவோடு கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் செஞ்சோற்றுக்கடனால் கட்டுப்பட்டிருப்பது பரிதாபத்திற்குரியது. இவர்கள் குணம் எப்படியானது என்பதை தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களே உணர வேண்டிய நேரம் இது. குறிப்பாக, இடதுசாரிகள் தேர்தல் நேரத்தில் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது நிதியல்ல வேறொன்று என்றும் நாளை ஆர்.எஸ்.பாரதி கூறலாம். மாற்றார் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று கூறிய அண்ணா ஆரம்பித்த இயக்கம் ஆணவத்தின் உச்சியிலிருந்து அழிவின் பள்ளத்தாக்கில் விரைவில் விழும்" எனத் தெரிவித்துள்ளார்.