ரூ.68,000 கோடியை மோடி தள்ளுபடி செய்ததாக கூறுவது தவறு. அந்தத் தொகை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  2009-10 முதல் 2013-14 வரை நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.1,45,226 கோடி ரூபாய் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என பாஜக முக்கியஸ்தர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பியோடிய நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தொழில்நுட்ப ரீதியாக தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி குறை கூறி வருகிறார். இது கொரோனா தொற்று பதற்றத்திலும் பெரும் புயலைக் கிளப்பி வருகிறது. 

ஆனால், அதனை மறுத்துள்ள பாஜக நிர்வாகிகள் ‘2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது ரூ.1,45,226 கோடி ரூபாய் தள்ளி வைப்பு (written off) செய்தது பற்றி யாரும் பேசவில்லை. ஆனால், தற்போது 68000 கோடி தள்ளிவைப்பு(written off) செய்ததை தள்ளுபடினு பொய் செய்தி பரப்பும் காங்கிரஸ் கொஞ்சம் நாகரிகமாக அரசியல் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். 

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ‘’Write-off க்கும் waiver-க்கும்  அதாவது தள்ளுபடிக்கும், தள்ளி வைப்புக்கும் வித்தியாசத்தை படித்து தெரிந்து கொண்டு பின் ஊடகங்களில் கேள்வி கேட்பது அறிவுடைமை. இந்த நாட்டின் துரதிருஷ்டம் ராகுல் போன்ற ஞான சூனியம் எதிர்கட்சி தலைவர். அவரது உளரல்களை சிரமேற்கொண்டு பரப்பும் பொறுப்பற்ற ஊடகங்கள். இம்மாதிரி பொய் பரப்ப ஒருவர் முட்டாளாக இருக்க வேண்டும். அல்லது வடிகட்டிய பொய்யனாக இருக்க வேண்டும்’’எனத் தெரிவித்துள்ளார்.