அதிமுக ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலையொட்டி வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார். இன்று காலை பவானியில் தனது பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;- திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்கள் சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார். மக்கள் சபையை நடத்தி எந்த மக்களுக்கு ஸ்டாலின் நல்லது செய்துள்ளார் எனக் கேள்வி எழுப்பினார்.

திமுகவினர் கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி, துரைமுருகன், பொன்முடி, பெரியகருப்பன், பன்னீர்செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவர்கள் இதுவரை வாய்தா வாங்கி தப்பித்து வருகின்றனர். இந்த வழக்குகளை விரைந்து முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது இவர்கள் பற்றி தெரியவரும். மேலும், 1.86 லட்சம் கோடி மதிப்பில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். அப்போதைய அமைச்சராக இருந்த ராசா இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன்மூலம் கலைஞர் டி.வி.க்கு 200 கோடி ரூபாய் கைமாறி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இதே போல மக்கள் சபைக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்போது, மக்கள் பிரச்சினைகள் எதையாவது தீர்த்து வைத்தார்களா? அல்லது மக்கள் அளித்த மனுவையாவது என்னிடம் வந்து கொடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பினார். 

குடும்ப அரசியல் மட்டுமே திமுகவில் நடைபெற்று வருகிறது. ஸ்டாலின் தொடங்கி உதயநிதி, கனிமொழி, தயாநிதிமாறன் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.அதிமுக ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. மு.க.ஸ்டாலின் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் கிடைக்குமா என்று கனவு காண்கிறார். அது ஒருபோதும் பலிக்காது. அதிமுகவை வீழ்த்த நினைக்கும் ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. இது மக்களை ஏமாற்றும் செயல். அதிமுக ஆட்சி மட்டுமே மக்களுக்கான ஆட்சி. ஈரோடு மாவட்டம் அதிமுகவின் கோட்டை வரும் தேர்தலிலும் நமது அரசு ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.