சென்னை திருவொற்றியூரில் போலீஸ் துரத்தியதில் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்ற ரௌடி ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு ரௌடி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் ரௌடிகளை பிடிக்கும்  ஆப்ரேஷனில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் ரௌடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் கிராமத்தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ராசையா நெல்லிக்காரன் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிபாசு ஆகிய  3  ரவுடிகள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் அவர்களை பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.

இதனிடையே திருவொற்றியூர் பட்டினத்தார் கோவில் தெருவை சேர்ந்த ரவுடி அண்ணாமலையை தொழில் போட்டி காரணமாக கொலை செய்ய இந்த 3 பேரும் திட்டமிட்டிருந்தனர்.

இதை அறிந்த அண்ணாமலை இது தொடர்பாக திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராசையா உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்தனர்.

ராசையா உள்ளிட்ட  3 ரௌடிகளும்  குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். 4-வது மாடியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோதிபாசு உடனே மாடியில் இருந்து குதித்து அங்கு உள்ள மரத்தின் கிளையை பிடித்து கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார். இதேபோல் ராசையா, மோகன்ராஜ் ஆகியோரும் மாடியில் இருந்து குதித்து அதே மரக்கிளையை பிடித்து தப்ப முயன்றனர். ஆனால் மரக்கிளை முறிந்ததால் 2 பேரும் தவறி கீழே விழுந்தனர்.

இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். ராசையா படுகாயம் அடைந்தார். உடனே ராசையாவை போலீசார் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதே ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக மோகன்ராஜ் உடல் அனுப்பி வைக்கப்பட்டது.