தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாட்டில் இருந்து அனைத்து சாலைகளையும் தடுக்க கேரளா முடிவு செய்துள்ளதென வதந்தி பரவுவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘’இப்போது ஒரு போலி செய்தி வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாட்டில் இருந்து அனைத்து சாலைகளையும் தடுக்க கேரளா முடிவு செய்துள்ளதென வதந்தி பரவுகிறது. இது போன்றதொரு விஷயத்தை நாங்கள் நினைத்ததில்லை.

அவர்கள் நம் அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. அவர்களை நம் சகோதரர்களாவே பார்க்கிறோம். கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். ‘’கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்’’ எனக் கூறியுள்ளார்.