R.K.nagar by election

மூன்று ஆண்டுகளில் மூன்று முறை தேர்தலை சந்திக்கும் ஆர்.கே.நகர்…முக்கிய கட்சிகளிடையே கடும் போட்டி..

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர், தொகுதியில் அவர் மறைந்ததையடுத்து ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த 2015, 2016, 2017 என மூன்று ஆண்டுகளில் இங்கு மூன்று ஆர்,கே.நகர் தொகுதி தேர்தலை சந்திக்கிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றதையடுத்து அவரது எம்எல்ஏ பதவி பறிபோனது.

பின்னர் அவர், அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால் ஆர்.கே.நகரில் போட்டியிட்டார்.

இதற்காக அந்த தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சரானார்.

இதனையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார்.

அந்த தேர்தலிலும் ஜெயலலிதா வெற்றி பெற்று முதலமைச்சரானார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததையடுத்து தற்போது அங்கு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஒரு சட்டமன்ற உறுப்பினர் மறைந்தால் 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் வைக்க வேண்டும் என்பதால் வரும் ஏப்ரல் 12 ல் இங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுக, அதிமுக, ஓபிஎஸ் அணி, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.

இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடைத் தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற பார்முலா இந்த தேர்தலில் ஜெயிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனென்றால் அதிமுக தற்போது 4 ஆக பிளவு பட்டு நிற்கிறது.