தி.மு.க. தன் வாழ்நாளில் எத்தனையோ தோல்விகளை சந்தித்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் ஆர்.கே.நகரில் அது அடைந்த தோல்வியானது வரலாற்றில் மறக்கவே முடியாத தோல்வி. 

காரணங்கள்?......

* ஜெயலலிதா எனும் பெரும் எதிரி மறைந்த பின் நடந்த முதல் தேர்தலில் மிக மோசமாக தோற்றது. 

*  தான் போட்டியிட்ட அத்தனை தேர்தலிலும் வெற்றி பெற்ற கருணாநிதி எனும் தலைவன் உயிரோடு இருக்கும்போது, வெறும் ஒற்றை தொகுதியில், அதுவும் பெரிய எதிர்ப்பாளர் இன்றியும் தோற்றது. 

* வெற்றியை நெருங்கி வந்து தோற்றிருந்தாலும் கூட பரவாயில்லை, இது டிபாசிட்டையே பறி கொடுத்த கொடூரம். இதையெல்லாம் தாண்டி...

* டி.டி.வி. தினகரன் எனும் புதிய அரசியல் தலைவர் உருவெடுத்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், அவரிடம் பல முறை தமிழகத்தை ஆண்ட இயக்கமான தி.மு.க. தோற்ற அவலம். இத்தனை பெருமைகளை தன்னுடையதாக்கிக் கொண்டது, ஆர்.கே.நகர் தோல்வியின் மூலம். இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணமாக சொல்லப்பட்டது, சரியான இடத்தில் சரியான நிர்வாகிகளை அமர்த்தவில்லை, கட்சியின் கட்டமைப்பு சரியாக ஏற்படுத்தப்படவில்லை, தலைமையின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த தொகுதியில் கட்சி இல்லை! என்பதுதான். 

சறுக்கலுக்கான காரணங்களை ஸ்டாலினிடம் தி.மு.க.வின் முக்கியபுள்ளிகள் எடுத்துச் சொல்லியபோது, ’விரைவில் அதை சீர் செய்கிறேன்!ஆர்.கே.நகரில் மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதை சீர் செய்கிறேன்!’ என்றார். ஆனால் நடந்ததா? என்றால், எங்கே மரண தோல்வியை கட்சி சந்தித்ததோ அங்கேயே கூட இன்னும் சூழ்நிலை மாறவில்லை! என்கிறார்கள். அதற்கான உதாரணங்களாக சிலவற்றையும் எடுத்துச் சொல்கிறார்கள்...

அதாவது, ஆர்.கே.நகர் தொகுதியின் நிர்வாகத்தில் உள்ள நபர்களுக்குள் பெரும் ஈகோ மோதல், யுத்தம் நடக்கிறதாம். இது போக தலைமைக்கு நெருக்கமான நபர்கள் சிலர் இந்த தொகுதியில் வட்டப் பொறுப்புகளுக்கு தங்கள் இஷ்டத்துக்கு, சில ஆதாயங்களை வாங்கிக் கொண்டு ஆட்களைப் போட்டிருக்கிறார்களாம். அதாவது கட்சித் தலைவரான ஸ்டாலின், மாவட்ட செயலாளர் அப்படி யாருடைய கவனத்துக்கும் வராமலேயே சில நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களாம். 

இதனால் பழைய நபர்களுக்கும், இந்த புதிய நிர்வாகிகளுக்கும் இடையில் கடும் முட்டல் மோதல் வெடித்து, பஞ்சாயத்து அறிவாலயம் வரை வந்துள்ளது. அதன் பிறகுதான் இப்படி புதிய நபர்கள் நியமிக்கப்பட்ட விவகாரமே தலைமைக்கு தெரிந்ததாம்! கொதித்துவிட்டாராம் ஸ்டாலின். கொதித்து என்ன புண்ணியம்? தன்னை மீறி இப்படியான நியமனங்களை செய்த, தனக்கு நெருங்கிய வட்டத்து நபர் மீது இப்போது வரை எந்த ஆக்‌ஷனும் அவர் எடுக்கவில்லையாம். ‘பின்னே எப்படி கட்சி விளங்கும்? இப்படியே போச்சுன்னா இனி எல்லா தொகுதியிலேயும் ஆர்.கே.நகர் நிலைமைதான் உருவாகும்!’ என்று கொதிக்கின்றனர் நிர்வாகிகள்.