RK Nagar Assembly constituency has been completed by 5 pm today.
ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக 258 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

21 கண்காணிப்பு பார்வையாளர்களும், 21 வீடியோ கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
45 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இதுவரை 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வரும் 24ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும் திமுக சார்பில் மருதுகணேஷும் பாஜக சார்பில் கரு.நாகராஜனும் சுயேட்சையாக டிடிவி தினகரனும் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் சுயேட்சைகள் உள்பட 59 பேர் களத்தில் உள்ளனர்.
அந்தந்த வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கடந்த சில நாட்களாக பிரசாரம் செய்தனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.-எம்.எல்.ஏ.க் கள் தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.
தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக பிரசாரம் செய்தார்.
பா.ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் செய்தார்.
சசிகலா அணியை சேர்ந்த தினகரன் தொகுதி முழுவதும் ஆதரவு திரட்டினார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயத்தை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 15 நாட்களுக்கும் மேலாக பிரசாரம் செய்து வந்தார். சுயேட்சை வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் வீதி வீதியாக பிரசாரம் செய்து ஓட்டு கேட்டனர்.

இந்நிலையில் பிரச்சாரத்திற்கான காலக்கெடு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதனால் கட்சி தலைவர்கள் மற்றும் தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு வெளியேறி வருகின்றனர்.
இதைதொடர்ந்து தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கல் அப்பகுதியில் இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
