வரும் மக்களவை தேர்தலில் மோதிர சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அவருக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. ஆகையால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள திருமாவளவன் கிட்டதட்ட உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.  

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று மாலை அறிவிக்க உள்ளது. இதற்கிடையில் பல்வேறு கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு, பல்வேறு சிறிய கட்சிகளும் தாங்கள் விரும்பும் சின்னத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தன.

 

அதன்படி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘மோதிரம்’ சின்னம் வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்திருந்தது.. ஆனால் அக்கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதேசமயம், தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மோதிரம் சின்னம் கிடைக்காததால் வேறு சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் கேட்க முடிவு செய்துள்ளது. 

இதனிடையே திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுகவினர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் மோதிரம் சின்னம் விசிகவுக்கு மறுக்கப்பட்டு விட்டதால் திமுக கேட்டுக் கொண்டபடி உதயசூரியன் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.