அதிமுக பொதுக்குழுவில் பாஜகவை விமர்சித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமிக்கெல்லாம் பதிலளிக்க தேவையில்லை எனவும், எங்களை பற்றி எடப்பாடி பேசினாரா? என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆவேசமாக கூறியுள்ளார். மதுரை திருப்பாலை பகுதியில் பாஜக சார்பில் கிராம பொங்கல் விழா தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் கொண்டாட்டப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் பேசியதாவது: தமிழகத்தில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது, மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரம் செய்துவருவதுதான் ஸ்டாலினின் வாடிக்கை, மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவை விவசாயிகள் வரவேற்கிறார்கள் எனவும், திமுகவிற்கு 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மிகப்பெரிய தோல்வியை தருவார்கள் என்றார். 

மத்திய அரசு பட்டியிலன மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்கிவருகிறது. ஆனால் அது குறித்து தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறது திமுக எனவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக மக்களையும் இணைப்பதில் பாஜக முனைப்பு காட்டுகிறது, மறுக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றை பாஜக மீட்டெடுக்கும் எனவும் பாரதியார், திருவள்ளுவர் உருவங்களை திமுக திட்டமிட்டு மறைத்துள்ளது, இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுகவிற்கு தமிழக மக்கள் மிகப்பெரிய பாடத்தை புகட்டுவார்கள், திமுக ஆட்சிக்கு வர துடிக்கிறது எனவும்,  திமுகவின் ஊழலையும், கட்டபஞ்சாயத்தையும் மக்கள் புறக்கணிப்பார்கள் எனவும் கூறுனார். 

மேலும், திமுகவில்  முன்னாள் அமைச்சரும் பெண் சட்டமன்ற உறுப்பினருமான பூங்கோதைக்கே அங்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தொண்டாமுத்தூரில் பெண் ஒருவர் திமுகவினரால் தாக்கப்பட்டுள்ளார். திமுகவில் உள்ள பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து கனிமொழி பேச வேண்டும். பாஜக தேர்தல் அறிக்கை பொதுமக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பாஜக குறித்த கே.பி.முனுசாமியின் கருத்துக்கு பாஜக செய்தி தொடர்பாளர்கள் தான் பதிலளிப்பார்கள் எனவும், பாஜக குறித்து எடப்பாடி பேசியுள்ளாரா? எனவும் கேள்வி எழுப்பியதோடு கேபி முனுசாமியின் பேச்சுக்கு விரைவில் பதில் அளிப்பேன் பொறுத்திருந்து பாருங்கள் என்றார் கோபத்துடன்.