Asianet News TamilAsianet News Tamil

'தயவு செய்து கோவில் கொடைவிழாக்களில் தொந்தரவு செய்யாதீங்க'..! காவல்துறைக்கு எதிராக கொந்தளிக்கும் வைகோ..!

கோவில் திருவிழாக்களை ஒட்டி, கிராமங்களில் அறிவார்ந்த பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள், ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள், வில்லிசை என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை தத்தமது ஊரின் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர். முன்பெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடப்பதுதான் வழக்கம்.

restrictions in temple festivals should be reduced, says vaiko
Author
Trichy, First Published Feb 19, 2020, 2:03 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் காவல்துறையின் கட்டுப்பாடுகள் குறைக்கப்பட வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் கோடிக்கணக்கான மக்கள் மாசி, பங்குனி மாதங்களில் தங்களின் குலதெய்வ வழிபாடுகளை திருவிழாக்களாக பன்னூறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். அதேபோல வெவ்வேறு மாதங்களில் அம்மன் கோவில் கொடை விழாக்களும் நாடு முழுவதும் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. உலகின் பல பகுதிகளுக்கு வேலை நிமித்தம் சென்றவர்கள் தத்தமது ஊர்களில் நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில்தான் ஒன்று கூடி உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் அளவளாவி மகிழ்கின்ற வாய்ப்பினைப் பெறுகின்றனர். உறவுகளை அழைத்து விருந்தோம்பல் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வாய்ப்புகளையும் இவ்விழாக்கள்தான் வழங்குகின்றன. இத்தகைய கோவில் திருவிழாக்களை ஒட்டி, கிராமங்களில் அறிவார்ந்த பட்டிமன்றங்கள், சமயச் சொற்பொழிவுகள், ஆடல், பாடல், இசைக் கச்சேரிகள், வில்லிசை என பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை தத்தமது ஊரின் நிதி ஆதாரங்களுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்து நடத்துகின்றனர்.

restrictions in temple festivals should be reduced, says vaiko

முன்பெல்லாம் இதுபோன்ற நிகழ்வுகள் இரவு 9 மணிக்கு மேல் தொடங்கி அதிகாலை 5 மணி வரை நடப்பதுதான் வழக்கம். கிராமப்புற மக்களும் அதனையே விரும்புகின்றனர். இத்திருவிழாக்களில் மைய நிகழ்ச்சியாக விளங்கும் சாமக்கொடை என்ற இறை வழிபாட்டுச் சடங்குகள், இன்றும் நள்ளிரவில்தான் நடத்தப்படுகின்றன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இரவு 10 மணிக்கு மேல் திருக்கோவில் விழாக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என காவல்துறை சார்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதைவிடக் கொடுமை, திருக்கோவில் பொறுப்பாளர்கள், ஊர் நாட்டாண்மைகள், கோவில் விழாக்களுக்கு அனுமதி பெறுவதற்காக காவல் நிலைய உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களுக்கு ஒருவார காலத்திற்கு நடையாய் நடந்து திரிவதும், விழாவிற்கு காவலர்கள் பாதுகாப்பிற்கு வர, காவல்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கிக் கிளைகளில் செலுத்தி (SBI) அதன் ரசீதுகளை (Chellan) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைத்து அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறைகளும் பெரும் சிரமங்களையும், கடுமையான மன உளைச்சலையும் விழா ஏற்ப்பாட்டாளர்களுக்கு தருகின்றன. இதனால் பல கிராமங்களில் திருவிழா ஏற்பாடுகளைச் செய்வதில் கூட சுணக்கம் ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே பல நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இச்சிரமங்களை என் கவனத்திற்குக் கொண்டு வந்தவண்ணம் உள்ளனர்.

restrictions in temple festivals should be reduced, says vaiko

அனைத்து பொதுமக்களும் ஏதோ ஒரு வகையில் அரசுக்கு வரி செலுத்துகின்றனர். அப்படி வரி செலுத்தும் மக்கள் பன்னெடுங்காலமாக ஆண்டுக்கு ஒருமுறை நடத்துகின்ற தங்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியான திருவிழாக்களுக்கு “மக்களின் நண்பன்” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் காவல்துறை தாமாகவே பங்கேற்று பாதுகாப்பு அளித்திட முன்வர வேண்டுமே அன்றி, கட்டணம் வசூலிப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. இப்பிரச்சினையில் நீதிமன்றத்தில் ஏதேனும் தடை ஆணைகள் இருப்பின் தமிழக அரசு மக்களின் உணர்வுகளை நேரடியாக அறிந்து தெளிந்து மேல்முறையீடு செய்து கிராமப்புற கோவில் திருவிழாக்கள் நள்ளிரவு வரை நடைபெற தக்க அனுமதி பெற ஆவன செய்திட வேண்டும். குறிப்பாக, ஒலிபெருக்கி பயன்படுத்திக் கொள்ளும் நேரத்தை இரவு 10 மணி வரை என்பதை குறைந்தபட்சம் அதிகாலை 2 மணி வரை என்ற வகையிலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை சென்று காவல்துறை அனுமதி பெற வேண்டும் என்பதை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளர் நிலையிலேயே அனுமதி வழங்கிடும் வகையிலும் நிபந்தனைகளை தளர்த்திட முன்வருவதோடு, காவல்துறை பாதுகாப்பிற்கு கட்டணம் செலுத்தும் நடைமுறையை முழுமையாக இரத்து செய்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios