துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி தனக்கு கட்சி தான் முக்கியம் என்று அறிவித்தால் தனக்கு தொண்டர்கள் மத்தியில் அனுதாபம் எழும் என்கிற ரீதியில் ஓபிஎஸ் புதிதாக கணக்கு ஒன்றை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சசிகலாவுடன் நேரடியாக மோதி போர்க்கொடி உயர்த்திய போது ஓபிஎஸ் வீடே ஜே ஜே என இருந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக தொண்டர்கள் அங்கு வந்து குவிந்தனர். மேலும் அதிமுகவின் முக்கிய பிரமுகர்களும் ஓபிஎஸ் வீட்டு வாசலில் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தம் அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை முற்றிலும் ஓரங்கட்டியது. இதன் பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து துணை முதலமைச்சராகி அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். ஆனால் இதற்கு விலையாக ஓபிஎஸ் கொடுத்தது தனது முதலமைச்சர் பதவியை.

முதலமைச்சர் பதவி மீது அப்போது முதலே ஓபிஎஸ்க்கு நீண்ட ஏக்கம் உண்டு. ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே சமரசம் செய்யப்பட்ட போதே கூடிய விரைவில் உங்களை முதலமைச்சராக்குவதாக ஓபிஎஸ்சிடம் டெல்லியில் வாக்குறுதி அளிக்கப்பட்டதாகவும் சொல்வார்கள். இதனால் தான் அதிமுகவுடன் ஒருங்கிணைந்த ஓராண்டின் போது டெல்லி சென்று அது குறித்து பேசிவிட்டு வந்தார் ஓபிஎஸ். அப்போது எடப்பாடி டெல்லியில் அதிகாரமிக்கவர்களிடம் மிகவும் நெருக்கமாகி இருந்தார். அதனால் ஓபிஎஸ்சால் எடப்பாடியை ஆட்டிப்பார்க்க முடியவில்லை. அதே சமயம் தொடர்ந்து முதலமைச்சர் கனவுடன் தான் அவர் அதிமுகவில் காய்களை நகர்த்தி வந்தார்.

இந்த நிலையில் தான் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான முழக்கங்கள் அதிமுகவில் எழுந்தன. ஆனால் இந்த முழக்கத்தில் ஒருவர் கூட ஓபிஎஸ்க்கு ஆதரவாக பேசவில்லை. இதனால் ஏற்பட்ட எரிச்சலில் தான் கோபம் அடைந்து சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாதியில் புறப்பட்டுச் சென்றார் ஓபிஎஸ். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஓபிஎஸ் தரப்பு, அப்போது முதலே முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தை பூதாகரப்படுத்தி செயற்குழு வரை வந்து வெற்றிக் கொடி நாட்டியுள்ளது. செயற்குழுவில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காதது, கடந்த முறையை போல் ஆதரவாளர்கள் இல்லாதது என ஓபிஎஸ் கடும் பின்னடைவை
சந்தித்துள்ளார்.

இதனால் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஓபிஎஸ் திட்டமிட்டு வருவதாக கூறுகிறார்கள். முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அம்மாவின் வாரிசு தான் தான் என்று கூறியும் துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப்பணிகளை தான் கவனிக்க உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தால் அனுதாப அலையில் அதிமுக தொண்டர்கள் அவரை ஆதரிப்பார்கள் என்றும் கணக்கு போடுகிறார். ஆனால் அதற்கெல்லாம் கட்சியில் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவு தேவை. அதனால் தான் நேற்று முதல் ஓபிஎஸ் முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆனால் அனைவருமே சட்டமன்ற தேர்தல் வரை பொறுத்துப் போகலாம் தேவையில்லாமல் கட்சியில் பிரச்சனை செய்தால் சின்னத்தை முடக்கிவிடுவார்கள் பிறகு யாருக்குமே அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என்று ஓபிஎஸ்சிடம் அவரது ஆதரவாளர்கள் கூறுவதாக சொல்கிறார்கள். மேலும் அவசரப்படாமல் இருந்தால் பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான வியூகத்தை வகுக்கலாம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஓபிஎஸ் இந்த விவகாரத்தில் டெல்லியின் உதவியை நாடும் பட்சத்தில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறும் என்கிறார்கள்.