தமிழகத்தில் ஜூலை மத்தியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.30 லட்சமாக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. உலகில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்துக்கு வந்துள்ளது. இதேபோல இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்ததாக தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த மார்ச் முதல் வாரத்தில் தமிழகத்தில் முதல் தொற்று தெரிய வந்தது. மே முதல் வாரத்தில் இந்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்தது. ஜூன் முதல் வாரத்தில் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694.
இதில் சென்னையில் மட்டுமே 19, 826 பேர். தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சுமார் 70 சதவீதம் தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. சென்னையில் அதிக பரிசோதனைகள் நடைபெறுவது இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. என்றபோதிலும் தமிழகத்தில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவது எல்லோரையும் அதிர்ச்சியடை வைத்துள்ளது. இந்நிலையில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் தலைமையில் கொரோனா தரவுகளின் அடிப்படையில் ஆய்வறிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் இப்போதுள்ள நிலையில் கொரோனா தொற்று பாதிப்புகள் கண்டுபிடிக்கும்பட்சத்தில் ஜூலை மத்தியில் சுமார் 3.30 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 1,949 ஆகவும், சென்னையில் மட்டும் 1,654 ஆக இருக்கும் என்றும்  ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பாதிப்பு செப்டம்பர், அக்டோபரில் உச்சத்தைத் தொட்டு, அதன் பின்னரே நோயின் தாக்கம் குறையும் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.