வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களை சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி,ஆர்.பாலு வெளியுறவுத்து றை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில்;- ஈரான், துபாய், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று அச்சுறுத்தலாலும் ஊரடங்காலும் சொந்த நாடு திரும்ப முடியாத அவர்கள், பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தி, சொந்த நாடு திரும்ப தங்களிடம் அவர்களின் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கால்களால் நடந்து தங்களின் வீடுகளை அடையும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலைமையை விட, வெளிநாடுகளில் சிக்கியவர்களின் நிலைமை மோசமானது. பல்வேறு நாடுகளும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தங்கள் நாட்டவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனவே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ஈரான், துபாய், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை சிறப்பு விமானங்கள் மூலம் சொந்த நாட்டுக்குத் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.