Request to increase Siddha Medical Divisions

டெங்கு காய்ச்சலா...? நிலவேம்பு குடிநீர் அருந்துங்க...! இப்படி மூலிகைகளை முன்னிலைப்படுத்தி பயன்படுத்தச் சொல்லும் அரசு, தமிழகத்தில் சித்த மருத்துவ பிரிவுகளை பரவலாகத் தொடங்க வேண்டும் என்று மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக தினமும் 10-15 பேர் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சல் வெகு வேகமாகப் பரவி வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடிச் செல்கின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளித்து வந்தாலும், டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க முடிவதில்லை. சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலரும் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்து வருகின்றனர்.

டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு சார்பில் தமிழகம் முழுவதும நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலவேம்பு குடிநீர், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தவும், ரத்த தட்டு அணுக்களை உடையாமல் பாதுகாக்கவும் வைத்திருக்க உதவுகிறது. 

டெங்கு நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்குவதால், நோயாளிகளின் உடலில் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும் என்றும், நிலவேம்பு குடிநீர் டெங்குவை கட்டுப்படுத்தாது என்றும் டெங்கு அறிகுறி தெரிந்த உடனேயே விரைவில் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் தற்போது 431 இடங்களில் அரசின் சித்த மருத்துவ பிரிவுகள் இருப்பதாகத் தெரிகிறது. இது மிகவும் குறைவு என்றும், டெங்கு பரவியுள்ள நிலையில், சித்த மருத்துவப் பிரிவுகள் இரண்டு மடடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சித்த மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

நிலவேம்பு உள்ளிட்ட சித்த மருந்துகளைப் பயன்படுத்த வலியுறுத்தும் தமிழக அரசு, தமிழகத்தில் சித்த மருத்துவ பிரிவுகளை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.