பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட  பெண் பத்திரிக்கையாளர், கவுரி லங்கேஷ் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என அவரது சகோதரர் இந்திரஜித் லங்கேஷ் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகாவில், புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷின் மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளில்  கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், லங்கேஷ் பத்திரிகே என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார். கன்னடத்தில் இவரது எழுத்துக்கள் மிகவும் புகழ் பெற்றது.

குறிப்பாக பாஜக வின் மத கொள்கைகளை மிகக்கடுமையாக எதிர்த்து வந்தார். இதனால் தொடர் மிரட்டலுக்கு ஆளாகி வந்தார்.

இந்நிலையில் கவுரி லங்கேஷ் , பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன், நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த, மர்ம நபர்கள், கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.

கொலையாளி மிக அருகில் இருந்து 7 ரவுண்ட் சுட்டதில் 4 குண்டுகள் தவறியது. இரு குண்டுகள் அவரது மார்பிலும், ஒரு குண்டு அவரது நெற்றியிலும் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சம்பவ இடத்தை பார்வையிட்ட . கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கவுரியின் சகோதரர், இந்திரஜித், கவுரியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் கவுரி லங்கேஷின் கொலைக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் நாடு முழுவதும் இன்று பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.