Repeatedly opposed to the federal government
நீட்தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலை எனவும் இது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயல் எனவும் மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் அதிமுகவைச் சேர்ந்த மதுசூதனன் தோல்வியடைந்தார். திமுக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட்டை இழந்தன.
குறிப்பாக பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன், நோட்டாவைவிட மிகக் குறைவான வாக்குகளே பெற்றிருந்தார். இது அக்கட்சிக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு தேசிய கட்சி நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றதால் சமூக வலைத்தளங்களில் வருத்தெடுக்கப்பட்டது.
இதைதொடர்ந்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழகத்தைக் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும், நோட்டாவுக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருவதாக கிண்டல் செய்தார்.
தேசிய கட்சிகளுக்கு தமிழகத்தில் என்றுமே மதிப்பு இருந்ததில்லை என்று கூறிய தம்பிதுரை, அக்கட்சிகள் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால்தான் ஒரு சில இடங்களில் ஜெயிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் நீட்தேர்வு கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலை எனவும் இது தமிழகத்தின் உரிமையை பறிக்கும் செயல் எனவும் மக்களவை துணை சாபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
எத்தனை டாக்டர்கள், இன்ஜினியர்கள் வேண்டும் என முடிவு செய்வதெல்லாம் மாநில உரிமை எனவும் இதில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்ற ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோர்ட் தீர்ப்பை காட்டி செயல்படுத்துவது வருத்தம் அளிப்பதாகவும் மாநில சுயாட்சி உரிமைகளை காக்க நீட்தேர்வு போன்றவற்றை நிரந்தரமாக வரவிடாமல் தடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
