திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக அகற்றம்! காங்கிரஸ் கட்சிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..
கர்நாடக தேர்தலில் சிறப்பான வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்ட வருகிறது. இன்று காலை முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி காங்கிரஸ் 138 இடங்களிலும், பாஜக 62 இடங்களிலும், ஜேடிஎஸ் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘ கர்நாடகத்தில் மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள். நியாயமற்ற வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவிநீக்கம் செய்தது, நாட்டின் முதன்மைப் புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்தியது, இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் கர்நாடக மக்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியலுக்கு கன்னட மக்கள் தக்க பாடம் புகட்டி தங்கள் கன்னடிக பெருமிதத்தை நிலைநிறுத்தியுள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பா.ஜ.க. முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்! இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : சுக்கு நூறாக உடைந்த தேர்தல் வியூகம்.. தென் இந்தியாவில் இருந்து வாஷ் அவுட்டான பாஜக..