’’காஷ்மீரில் மதவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசுக்கு மக்கள் தந்தது, இப்படி செயல்படுவதற்காகத்தான். தேச விரோதிகளையும் பிரிவினைவாதிகளையும் கூப்பிட்டுப் பேசச்சொல்லி மக்கள் வாக்களிக்கவில்லை'' என்று  பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370, 35ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்த எதிர்க்கட்சியினருக்கு பதில் அளுக்கும் வகையில்  தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, ''இன்றுதான் முழு இந்தியாவும் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கத்தக்க நாள் இது. ஏனெனில் சட்டப்பிரிவு எப்படி ஆரம்பிக்கிறது என்பதை எதிர்க்கட்சிகள் படித்திருக்கின்றனவா? என்று எனக்குத் தெரியவில்லை. சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிகமான ஏற்பாடு என்றுதான் அதில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் 70 ஆண்டுகள் என்பது தற்காலிகமா என்ன? அது ஏற்கெனவே நீக்கப்பட்டிருக்க வேண்டிய சட்டப்பிரிவு. இன்று நடந்திருக்கிறது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுமையாக இணைக்கப்பட்டிருக்கிறது. சுயநலமான அரசியல்வாதிகள்தான் இதை எதிர்க்கிறார்கள். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொலை செய்யப்பட்டு, பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டபோது, அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு டெல்லி வீதிகளில் அகதிகளாக இருந்தபோது இப்போது பேசுபவர்கள் எங்கே போனார்கள்? இதன் மூலம் காஷ்மீரில் மதவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் மூலதனமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இந்த நாடு ஒரே நாடாகும். வினோதமான சட்டங்கள் இருந்த நிலையில் இருந்து, அர்த்தமுள்ள ஜனநாயகம் உதயமாகி உள்ளது.மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அரசுக்கு மக்கள் தந்தது, செயல்படுவதற்காகத்தான். தேச விரோதிகளையும் பிரிவினைவாதிகளையும் கூப்பிட்டுப் பேசச்சொல்லி மக்கள் வாக்களிக்கவில்லை'' என்று அந்தப் பேட்டியில் முழங்கியுள்ளார் ஹெச்.ராஜா.