சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவ குழு தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,661 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 14வது நாளாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டி பதிவாகியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31,896ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர், மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தளர்வுகளை குறைத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பரிந்துரைத்துள்ளோம். சென்னையில் வார்டு வார்டாக மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறியப்பட்டது. 

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னையில் 12,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் நலன் கருதி 253 நடமாடும் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை அதிகம் நடைபெறுகிறது. கொரோனாவை அரசால் மட்டுமே கட்டுப்படுத்திட முடியாது. அரசு நடவடிக்கைகள் எடுத்தாலும் மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இனி வரும் காலங்களில் படிப்படியாக குறையும் என மருத்துவ குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.