Reason for people belief in Sasikala
சசிகலா மீதான நம்பிக்கையே ஆர்.கே.நகர் வெற்றிக்கு காரணம் என்று இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் மூழ்கி உள்ளனர். தினகரனின் இந்த வெற்றியை அவர்கள் நேற்று முதல் கொண்டாடி வருகின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது தினகரன் வெற்றி முகம் நோக்கி செல்வதை அடுத்து, அவருக்கு அதிமுகவை சேர்ந்த சிலர் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், வேலூர் எம்.பி. செங்குட்டுவன், தினகரன் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவித்தார். மேலும், எம்.எல்.,ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, சின்னம்மா அவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றுதான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு என்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாள் அன்று தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா குறித்த வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மறைந்த ஜெயலலிதா ஜூஸ் அருந்துவது போன்று காட்சி இருந்தது. இது பரபரப்பாக பேசப்பட்டது.
ஜெயலலிதா குறித்த வீடியோ வெளியிட்டதற்கு இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வெளியிட்டது கீழ்த்தரமான செயல் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, சசிகலா மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே ஆர்.கே.நகர் வெற்றிக்கு காரணம் என்று கிருஷ்ணபிரியா பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
