ராயபுரம் சட்டப்பேரவை தேர்தலில் தம்மை எதிர்த்து போட்டியிட தயாரா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சவால் விடுத்துள்ளார். 

சென்னை அடையாரில் இருக்கும் ஜானகி எம்ஜிஆர் மகளிர் கல்லூரியில் பொங்கல் விழா தென்இந்திய பத்திரிக்கையாளர் யூனியன் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மேடையில் பாட்டு பாடியதோடு விழாவில் பாடல் பாடுவதில் சிறந்த 5 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ராயபுரம் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்னை எதிர்த்துப் போட்டியிட தயாரா என்று சவால் விடுத்தார். மேலும், அரசியலில் கண்ணியம் காக்க வேண்டும். திமுகவினர் நாகரிகமாகப் பேசவேண்டும் என தெரிவித்தார்.

ஏற்கனவே மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் நான் போட்டியிடுவேன் என்று சீமான் மற்றும் குஷ்பு உள்ளிட்ட ஒரு சிலர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.