அதிமுக அரசுக்கு ஆதரவு அளிக்க 40 திமுக எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

டிடிவி. தினகரனின் அமமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருதாச்சலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய 3 பேர் மீது அதிமுக கொறடா ராஜேந்திரன் ஆதாரத்துடன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து 3 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனையடுத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக மனு அளித்துள்ளது.

 

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ’’அதிமுக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார். அதிமுகவினரை கண்டு திமுக அஞ்சி நடுங்கிறது. கருணாநிதிக்கு மறைவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்காத எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அதிமுகவிற்கு வர தாயாராக இருக்கின்றனர். பணம் கொடுத்து அழைக்க வேண்டாம். எடப்பாடி கண் அசைவு காட்டினாலே போதும். 40 திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவுக்கு வர தயாராக உள்ளனர்.

 

 இப்போகூட மு.க.ஸ்டாலின் ஆட்சியை பிடிக்க புறவாசல் வழியாக வர பார்க்கிறார். திமுக மனதளவில் பிளவுபட்டுள்ளது. எங்கள் மீது கல் எரிந்தால் அவர் மீது பல கற்கள் விழுவதற்கு தயராக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நியாயமான அரசியலை செய்ய வேண்டும். 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வரட்டும் ஆட்சி அமைப்பது எடப்பாடியா அல்லது ஸ்டாலினா என்று பார்த்துக்கொள்வோம்’’ என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.