மனிதவெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள்..! ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்
அதிமுக தொண்டர்கள் மனிதவெடிகுண்டாக மாறுவார்கள், தவறான தீர்ப்பால் பாண்டிய மன்னன் உயிரை விட்டதை போல ஸ்டாலின் செய்ய வேண்டாம், என மதுரை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டது.
இபிஎஸ் மீது வழக்கு பதிவு
சிவகங்கை மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று முன்தினம் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமான நிலையத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த போது அவரோடு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த ராஜேஸ்வரன் பயணம் செய்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை வீடியோ எடுத்து பேஸ்புக் லைவ் செய்த ராஜேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினார். இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்த நிலையில் விமான நிலைய சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பு மீதும் மதுரை மாநகர காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் தலைமையில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், திமுகவின் பி.டீம் துரோகிகள் இணைந்து சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றனர். நயவஞ்சக, மக்கள்விரோத அரசாக திமுக அரசு உள்ளது. நெஞ்சுறுதி இல்லாதவர்கள், கருணை இல்லாதவர்கள், சட்டம் தெரியாதவர்கள் தான் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கொடுத்த புகார் மனுவை புறந்தள்ளிவிட்டு ஊர்பேர் தெரியாத புறம்போக்குகள் கொடுத்த மனுவை வைத்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மனித வெடிகுண்டாக மாறுவோம்
அதிமுக மீது சட்டவிதிமுறைகள் மீறுமானால் மதுரையிலே மனிதவெடிகுண்டாக அதிமுக தொண்டர்கள் மாறுவார்கள் என எச்சரிக்கை விடுக்கிறேன். மதுரை அதிமுகவினர் ஜெயிலுக்கு போக பயந்தவர்கள் அல்ல. நேற்று வரை காவல்துறை எங்கள் மீது அன்பானவர்களாக இருந்தார்கள். இன்று உங்கள் மீது அன்பானவராக உள்ளார்கள். நாளை எங்கள் ஆட்சியில் எடப்பாடிக்கு அன்பானவர்களாக இருப்பார்கள். ஸ்டாலின் அதிமுகவுக்கு பூச்சாண்டி காட்ட வேண்டாம். விரைவில் ஸ்டாலின் கோட்டையில் இருந்து வீட்டுக்கு செல்வார். எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் இருந்து கோட்டைக்கு செல்வார் என பேசினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட இப்படியெல்லாம் எதிர்க்கட்சி மீது வழக்கு போட்டதில்லை.
எந்த முதல்வரும் செய்யாததை செய்துள்ளார்
எந்த முதல்வரும் செய்யாத செயலை ஸ்டாலின் செய்துள்ளார். சோதனை வரும்போதெல்லாம் தொண்டர்கள் தான் உடன் உள்ளனர். அதிமுக கூட்டத்தை கூட்டினால் மதுரை தாங்குமா? மக்களுக்கு அல்வா கொடுத்து ஏமாற்றி வரும் திமுக மக்களை திசை திருப்ப எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மக்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும், சில நல்ல செயல்களால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை ஸ்டாலின் வாங்குவார் என நேற்று முன்தினம் வரை நான் நினைத்தேன்.
திமுகவிற்கு பதிலடி
ஜெயலலிதாவின் மறுபதிப்பாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். எடப்பாடி குரலில் கொஞ்சம் கூட பதட்டம் இருந்ததில்லை. திமுகவுக்கு சரியான பதிலடி கொடுக்கக்கூடிய தலைவராக எடப்பாடி மட்டுமே இருக்கிறார். அருகில் தான் கோவலன்பொட்டல் உள்ளது. தவறான தீர்ப்பு கொடுத்து கண்ணகி நீதி கேட்டதால் தான் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனும், அவரது மனைவியும் இறந்து போனர். அதுபோல தவறான வழக்குப்பதிவு செய்த முதல்வர் அப்படி செய்ய வேண்டாம். தவறான வழக்குப்பிரிவுகளில் எடப்பாடி பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்த காவல்துறை மீது ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்போது தான் நீங்கள் கருணாநிதியின் மகன் என ஆவேசமாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?- ஓபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்