கட்டப்பஞ்சாயத்து செய்யும் திமுக கவுன்சிலர்கள்.! எத்தனை நாள் கண்டும் காணாமல் இருப்பீர்கள்- அண்ணாமலை கேள்வி
அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். காவல் துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டமும் இன்று கொலையில் முடிந்திருக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
பொன்னேரியில் கொலை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீடு காலி செய்வதை தொடர்பாக காயத்ரி மற்றும் நந்தினி ஆகியோருக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் நந்தினி என்ற பெண்ணுக்கு ஆதரவாக பொன்னேரி 17 வது வார்டு கவுன்சிலர் இளங்கோ தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது காயத்ரியின் தங்கை மற்றும் உறவினர்களை கவுன்சிலரின் இங்கோவின் ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனையடுத்து மீண்டும் காயத்ரி உறவினர்களான பாலமுருகனை கவுன்சிலரின் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பாலமுருகன் உடலில் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
நடவடிக்கை எடுக்காத போலீஸ்
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொன்னேரி 17 வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சனையில் தலையிட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார். அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் திமுக கவுன்சிலர் இதில் ஈடுபட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர்.
மௌனமாக இருக்கும் ஸ்டாலின்
காவல் துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டமும் இன்று கொலையில் முடிந்திருக்கிறது. தங்கள் கட்சியினர், தமிழகத்தை உலகின் அதிகம் குற்றம் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றிக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மௌனமாக இருப்பீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படியுங்கள்
பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசி எச்சரித்த கடம்பூர் ராஜூ