செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட இருப்பதாகவும், சென்னையில் மட்டும் சுமார் 400 கடைகள் தொடங்க இருப்பதாகவும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதனை தெரிவித்தார். மேலும், தமிழக த்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணிணி மயமாக்கப்பட்டுள்ளதால், தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு தேவையான பொருள்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைத்து வருவதாக கூறினார். 

நகர்புறங்களில் ரேசன் கடைகளில் கூட்டம் அதிகரிப்பது, மற்றும் கடைகள் வாடகைக்கு கிடைக்காதது போன்றவற்றை கருத்தில் கொண்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடமாடும் ரேசன் கடைகள் கொண்டுவரப்பட உள்ளதாக கூறினார். அடுத்த மாதமே இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரேஷன் கடைகளை படிப்படியாக மூடுவதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டுவரவில்லை என்ற அவர், 13 லட்சம் கிசான் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தங்கு தடையின்றி கடன் வழங்கி வருகிறது என கூறினார். 

ஆளுங்கட்சி, எதிர்கட்சி என இல்லாமல் எந்த பகுதியில் யார் கடைகள் குறித்த கோரிக்கை வைத்துள்ளனரோ, அதனை கருத்தில் கொண்டு அந்த பகுதிகளில்  கடைகளை ஒதுக்கியுள்ளோம் என்றார். இந்த திட்டத்தின் மூலம் விலையில்லா பொருட்களை இல்லத்தின் அருகிலே கொண்டு சென்று கொடுக்கும் ஒரே அரசு அதிமுக அரசு தான் என அவர் கூறினார். தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களை கவரும் வகையில் அதிமுக அரசு திட்டங்களை அறிவித்து வருவது குறிப்பிடதக்கது.