Rating dowm day by day Panneerselvam meeting

’டாக் ஆப் தி டவுன்’ ஆக இருந்த ஓ.பன்னீர் செல்வம் மெதுமெதுவாக இறங்கி டாக் ஆப் தி வில்லேஜ், டாக் ஆப் தி ஸ்ட்ரீட்! என்று ஆகிக் கொண்டிருக்கிறாரோ என்று அவரது அணியினரே நோகுமளவுக்கு சூழல் உருவாகியுள்ளது. யெஸ்! அந்தளவுக்கு மக்கள் மத்தியில் அவரது ரேட்டிங் குறைந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 

ஜெயலலிதா அ.தி.மு.க. ஆட்சியிலேயே தான் முதல்வராக அமர முடியாத சூழல் வரும்போதெல்லாம் பன்னீரை அதில் அமர வைத்தார். அப்போதெல்லாம் மக்கள் மத்தியில் பன்னீர் மீது ஒரு அபிமானம், ஜெ.,விசுவாசி என்கிற கருத்து இருந்ததே தவிர செல்வாக்கு என்று எதுவும் இருந்ததில்லை. ஆனால் ஜெ., மறைவுக்கு பின் சசிகலாவுக்கு எதிராக அவர் தியானத்தில் அமர்ந்தெழுந்து கண்களை கசக்கியபோது அவர் மீதான மக்கள் அபிமானம் காட்டுத்தீ போல் பற்றி எறிய துவங்கியது.

’முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லி என்னை வர்புறுத்தினார்கள்’ என்று அவர் குரல் உடைந்தபோது கணிசமான மக்களின் உள்ளமும் உடைந்தது.

பெண்களின் கண்ணீரை விட தமிழகத்தில் ஆண்களின் கண்ணீருக்கு சில சமயங்களில் ஈர்ப்பு அதிகம். ஆக மக்களை ஈர்த்தார் பன்னீர்.

அது வெகு சில நாட்களிலேயே செல்வாக்காக உருவெடுத்தது. அவரோடு முக்கிய தலைகள் ஐந்தாறு பேர் வந்து நின்றதும், எக்கச்சக்க தொண்டர்கள் அவருக்கு தோள் கொடுத்ததும், ‘அம்மாவின் மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்.’ என்று அவர் முழங்கியதும் பன்னீரை ஒரு தலைவராக பார்க்க துவங்கினர் மக்கள். 

ஆனால் மக்கள் மத்தியில் பன்னீருக்கு அந்த அங்கீகாரம் கிடைக்க ஒரே காரணம் ‘சசியை எதிர்க்கிறார்’ எனும் ஒற்றை எண்ணம்தான். 

அதன் பிறகு சசியின் கைது, தினகரனின் வரவு, தினகரன் கைது என்று நாட்களும், நிகழ்வுகளும் நகர்ந்தபோது பன்னீர் வெளிப்படையாக உந்தி அடுத்த லெவலுக்கு வரவேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. 

மாறாக சசி_தினகரன் அற்ற அ.தி.மு.க. அணியுடன் இணைந்து கட்சியை வலுவாக்குவது, சின்னத்தையும், பெயரையும் திரும்பப் பெறுவது என்று அவரது போக்கு சற்றே காற்றடிக்கும் திசையில் நகர ஆரம்பித்தபோதும் கூட மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. பன்னீரின் செல்வாக்கு வாசமும் குறையவில்லை. 

ஆனால் இணைப்பு பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போனதே தவிர உருப்படியாக எதுவும் ஆகவில்லை. ‘இரு அணிகளின் இணைப்பின் மூலம் எங்களின் நோக்கம் பதவி பெறுவது இல்லை. புரட்சித்தலைவரும், அம்மாவும் கட்டி எழுப்பிய இந்த கட்சியை வலுவாக்குவதே.’ என்றார் பன்னீர். 

ஆனால் எடப்பாடி தரப்போ ‘அவர்கள் முதல்வர், நிதியமைச்சர், பொதுசெயலாளர் என்று எல்லா முக்கிய பதவிகளையும் எதிர்பார்க்கிறார்கள்.’ என்று போட்டுத்தாக்கி, இணைப்புக்கு பன்னீர் சம்மதிப்பதே பதவியை பெறுவதற்காகத்தான் என்று அடித்துச் சொன்னது. இதை மக்களால் முழுவதுமாக ‘பொய்’ என்று நம்பமுடியவில்லை.

இதற்குப் பின் இரண்டு தரப்பினரும் கொத்தவால்சாவடி சண்டை போல் காசு மூச் என்று சண்டை போட துவங்கினரே தவிர ‘ஜெ., மரணத்துக்கு நீதி விசாரணை’ உள்ளிட்ட எந்த உருப்படியான கோரிக்கையும் நிறைவேறுவதற்கான வழி உருவாவதற்கான சூழல் ஏற்படவில்லை என்பதே உண்மை. இதெல்லாம் பன்னீரை பற்றி மக்கள் மனதில் ஒரு அயற்சியையே உருவாக்கியது. மேலும் பன்னீர்செல்வம் பா.ஜ.க.வின் தத்துப்பிள்ளையாக செயல்படுகிறார் என்பதை நாஞ்சில் சம்பத்தும், எடப்பாடி அணியினரும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகளும் தொடர்ந்து சொல்லிவந்ததையும் மக்கள் கவனிக்க தவறவுமில்லை. 

இறுதியாக இரண்டு மூன்று நாட்களுக்கு முன் ‘மருத்துவத்தை பற்றி தெரியாத பன்னீர், அம்மாவின் மரணத்தை பற்றி பேச அருகதையில்லை’ என்று நாஞ்சில் சம்பத் முழங்கியதும், இதற்கு பதிலாக ‘எடப்பாடியின் அரசு தங்களது பலவீனத்தாலேயே கவிழும்.’ என்று மைத்ரேயன் சபித்ததும் அவல உச்சம். சசி அணியை பன்னீர் அணி ஒரு காலத்தில் விமர்சித்தபோது மக்கள் மனதில் இனம்புரியாத ஒரு மகிழ்வு இருந்தது உண்மையே.

ஆனால் இதை மட்டுமே ஒரு பிழைப்பாக வைத்துக் கொண்டதன் மூலம் தாங்களும் அதே குட்டையில் ஊறி உளுத்துப்போன மட்டை என்பதை பன்னீர் அணி நிரூபித்ததன் மூலம் மக்கள் இவர்கள் இருவரின் பக்கமிருந்தும் விலக துவங்கியிருப்பதுதான் யதார்த்தம். 

இந்த சூழலில், கடந்த 14_ம் தேதியன்று சென்னை தேனாம்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பன்னீர்செல்வம் ‘எம்.ஜி.ஆர்_ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல் கட்சி வலிமையாக இருக்கத்தான் போராடி வருகிறோம். இரண்டு அணிகளுக்குள் மோதல் ஒன்றும் அதிகரிக்கவில்லை.’ என்று எந்த உப்புசப்புமில்லாமல் இரு அணிகளுக்கும் சேர்த்து பொத்தாம் பொதுவாக பேசியிருப்பதை மக்கள் ரசிக்கவில்லை.

இவற்றின் மூலம் சடசடவென மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து பன்னீரின் செல்வாக்கு வாசம் பையப்பைய குறைந்து வருவது நிதர்சனமாகி இருக்கிறது. 

இந்த நேரத்தில் நாஞ்சில் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது...’எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல், கட்டுப்பாடான கண்ணியத்தோடு, இன்முகமாக எல்லோரையும் அரவணைக்கும் தினகரனை அ.தி.மு.க.வின் அத்தனை தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளும் காலம் வந்தே தீரும்.” என்பதுதான் அது. 
பன்னீரின் செல்வாக்கு சரிவானது திகாரிலிருக்கும் தினகரன் வரை தெரியாமலா இருக்கும்?!