ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க பீகார் ஆளுநர் அழைத்தது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறியதாகும். இந்த புதிய ஆட்சியை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம், மக்கள் மன்றத்தின் கதவையும் தட்டுவோம் என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா லாலுபிரசாத் யாதவின் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கட்சியை ஆட்சி அமைக்க பீகார் ஆளுநர் அழைத்தது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அப்பட்டமாக மீறியதாகும். இதை எதிர்த்து நீதிமன்றத்தின் கதவையும் தட்டுவோம், மக்கள் மன்றத்தின் கதவையும் தட்டுவோம். மக்களிடம் பா.ஜனதா கட்சியின் சதியை அம்பலப்படுத்துவோம்.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கொலை செய்ததுபோல் ஆளூநர் முடிவு எடுத்து பா.ஜனதா ஆதரவுடன் நிதிஷ் குமாரை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார்.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சட்டசபையில் உள்ள தனிப் பெரும்பான்மையுள்ள ஒரு கட்சியை பதவி ஏற்க அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், ஆளுநர் செயல் என்பது, தீர்ப்பை அப்பட்டமாக மீறியதாகும். நிதிஷ் குமாரின் முடிவால், அவரின் கட்சியைச் சேர்ந் 45 எம்.எல்.ஏ.க்களே வேதனைப்பட்டு அதிருப்தியில் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.