பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தேர்தல் வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் கடந்த 2016ல் நடந்த தேர்தலில் அதிமுக சார்பில்  டாக்டர் கதிர்காமு போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரனுடன் இவர் இணைந்ததால், எம்எல்ஏ பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இவர் தற்போது பெரியகுளம் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், பெரியகுளம் அருகே சருத்திபட்டியை சேர்ந்த இளம்பெண், ஏப்ரல் 8-ம் தேதி தேனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கதிர்காமு மீது பாலியல் புகார் அளித்தார். 

அதில், கடந்த 2015-ம் ஆண்டு எனது தந்தைக்கு உடல்நலம் பாதித்ததால் அல்லிநகரத்திலுள்ள டாக்டர் கதிர்காமு மருத்துவமனைக்கு சென்றோம். எனக்கும் முழங்கால் வலி இருந்ததால் டாக்டர் கதிர்காமுவிடம் சிகிச்சை பெற்றேன். அப்போது மயக்க ஊசி போட்டு என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கு அவரிடம் நியாயம் கேட்ட போது, மயக்கத்தில் இருந்த என்னை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், தனது ஆசைக்கு இணங்காவிட்டால் படங்கள், வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டி, பலமுறை என்னை பலாத்காரம் செய்தார் என தெரிவித்திருந்தார். 

இந்தப் புகாரின்பேரில் பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் தேனி அனைத்து மகளிர் போலீசார் டாக்டர் கதிர்காமு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது வேட்பாளர் கதிர்காமு மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது.

இதனையடுத்து அரசியல் காரணங்களுக்காக தம் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக முன்ஜாமீன் கோரி கதிர்காமு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் அமமுக வேட்பாளர் கதிர்காமுவிற்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும் தேர்தல் வரை கதிர்காமுவை கைது செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.