மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு  தடை விதிக்கக் கோரியும் போராட்டம் நடத்திய திரைத்துறையினர் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி கைது செய்தனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்  

உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு நிச்சயமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று கடந்த ஓராண்டாகவே மத்திய அரசும், மாநில அரசும் மக்களிடையே தவறான நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று கூறி வந்த மத்திய, மாநில ஆட்சியாளர்கள்  ஜல்லிக்கட்டு சாத்தியமில்லை என இரட்டை வார்த்தையில் கூறிவிட்டு ஒதுங்கி விட்டனர். 

மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் மைய பூமியாக திகழ்வது மதுரை மாவட்டம் தான். ஆனால், அங்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்ந்து கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கடந்த 11ம் தேதி மதுரை மாநகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடியடியும், 12ம் தேதி சோழவந்தானில் தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 4 நாட்களில் மூன்றாவது முறையாக காவல்துறையினர்  இங்கு தடியடி நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்டோர் காயமடைந்தும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வீராவேசமாக கூறியிருந்தார். ஆனால், அவரது கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை இன்று அவர் தங்கியுள்ள இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இளைஞர்கள் மீது தடியடி நடத்தியிருக்கிறது. இது தான் ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டும் லட்சனமா? தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டால் தமிழக அரசை கலைக்க வேண்டும் என்று பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியிருந்தன. அந்த வெற்று மிரட்டலுக்கு பயந்து ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் மீது முதலமைச்சர் தடியடியை கட்டவிழ்த்து விட்டாரா?

மதுரை மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் வட இந்தியராக இருக்கும் நிலையில் தமிழர்களின் கலாச்சார உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு மரியாதை கொடுக்காமல் பீட்டா உள்ளிட்ட அமைப்புகளின் கையாளாக மாறி தமிழ் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.