திண்டுக்கல்
 
சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ராமராஜ்ய ரத யாத்திரை மேற்கொள்ளப்படும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத், திண்டுக்கல் மாவட்டம், பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்டி, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். நீதிமன்றம் உத்தரவு மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத கர்நாடக மாநில அரசு, முதல்-மந்திரி சித்தராமையா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். 

நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் நோக்கமும் தமிழகத்தில் ஆன்மிக அரசியல் மலர வேண்டும் என்பதுதான்.

நடிகர் கமல்ஹாசனுக்கு வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு உள்ளது. அவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று கூறியிருக்கிறார். இது, போராட்டத்தின் நோக்கத்தை திசை திரும்பும் முயற்சி ஆகும்.

இதேபோல தூத்துக்குடியில் நடந்துவரும் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளனர். அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். போராட்டத்தில் தூத்துக்குடி நகர மக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும். அதேவேளையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண நீதிமன்றம் மற்றும் பசுமை தீர்ப்பாயத்தை போராட்டக்காரர்கள் நாட வேண்டும். 

தமிழகத்தில் ராமராஜ்யம் அமைய இந்து மக்கள் கட்சி பாடுபட்டு வருகிறது. வருகிற சித்திரை மாதம் முழுவதும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ராமராஜ்ய ரத யாத்திரை மேற்கொள்ளப்பட உள்ளது" என்று அவர் கூறினார்.