அமைதியை நிலைநாட்டிய ராமநாதபுரம் எஸ்.பி மீது அரசியல் அழுத்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எஸ்.டி.பி.ஐ. கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

ராமநாதபுரத்தில்  இளைஞர் ஒருவர்  தனிப்பட்ட விரோதம் காரணமாக கொலை செய்யபட்ட நிலையில், அந்த கொலையை மதரீதியாக மாற்றி கலவரச் சூழலை ஏற்படுத்த பாஜகவின் தேசிய செயலர் எச்.ராஜா முதல் அதன் பல்வேறு தலைவர்களும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி, இரு சமூகங்களுக்கிடையே பதட்டத்தை ஏற்படுத்தினர்.இந்த நிலையில், அந்த கொலைக்கு தனிப்பட்ட விரோதம் தான் காரணம் என்றும், தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் ராமநாதபுரம் எஸ்.பி. வருண் குமார் ஐ.பி.எஸ். அவர்கள் டிவிட்டர் சமூக வலைதளம் மூலமாக தெரிவித்ததை தொடர்ந்து அங்கு  அமைதி நிலைத்தது. 

இந்த நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண் குமார் ஐ.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு பாஜகவினரின் அரசியல் அழுத்தம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் அமைதியை கெடுக்க நினைக்கும் தீய சக்திகளின் பொய்யான பரப்புரைகளை மறுத்து, சமூக அமைதியை நிலைநாட்டிய, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய ஒரு காவல்துறை அதிகாரியை, அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தமிழக அரசு அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருப்பது என்ற தண்டனை முறையற்றது. 

ஆகவே, தனது நேர்மையான பணியின் மூலம் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற வருண் குமார் ஐ.பி.எஸ். அவர்களின் காத்திருப்போர் பட்டியலை ரத்து செய்து, மீண்டும் ராமநாதபுரம் எஸ்.பி.யாக நியமிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.