ஜல்லிக்கட்டு விவகாரத்தில் வாய்ச்சொல் வீரர்களாக இருந்த அரசியல் தலைவர்களை புறந்தள்ளிவிட்டு இளைஞர்கள் , மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசியல் கட்சிகளில் இதுவரை வாய் மூடி மவுனமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் லேசாக வாய் திறந்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி அரசியல் கட்சிகள் உணவற்ற சடங்கு பூர்வமான போராட்டங்கள் நடத்தி கொண்டிருக்க , சமூக வலைதளங்களில் எழுந்த கொந்தளிப்பின் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் குதித்தனர். 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பிரதான கட்சியான அதிமுக ஆளுங்கட்சி என்ற நிலையில் பின்வாங்கி கொண்டது. திமுக மிகப்பெரும் இளைஞர் பட்டாளத்தை வைத்து கொண்டிருப்பதாக மார்த்தட்டி கொண்டிருக்கும் கட்சி சில ஆர்பாட்டங்களை மட்டும் நடத்திவிட்டு முடித்து கொண்டனர்.

காங்கிரஸ் ஆர்வம் காட்டவில்லை , பாஜக ஆளும் கட்சி அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லி ஏமாற்றினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உண்ணாவிரதம் இருந்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் தாங்கள் ஆதரவளிப்போம் என்றனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முத்தரசன் கண்டித்தார்.

திருமாவளன் மேலுக்கு கருத்தை தெரிவித்து ஒதுங்கிகொண்டார். ஆனால் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்கத்தை 1980 களில் துவக்கி வழி காட்டிய இயக்கம், மாணவர் சங்கத்தை அகில இந்திய அளவில் நடத்தும் இயக்கம் ,விவசாயிகளின் வாழ்வோடும் தமிழர் பண்பாட்டோடும் ஈடுபடும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடே கொந்தளிக்கும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்கள் தன்னெழுச்சியாக களம் இறங்கியுள்ள இயக்கத்திலிருந்து ஒதுங்கி நிற்கிறது. 

அன்னிய அமெரிக்க அமைப்பான பீட்டாவை லட்சக்கணக்கான இளைஞர்கள் எதிர்க்கும் போது ஒதுங்கி நின்றது. எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு பின்னர் ஜல்லிக்கட்டு விவகாரம் முடியும் நிலையில் நாங்களும் இருக்கிறோம் என்கிற நிலையில் வாய் திறந்துள்ளார் சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். 

எல்லாம் முடிந்த பின்னர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கூடாது , என்று அறிக்கை விட்டுள்ளார். 

இது பற்றி கருத்து தெரிவித்த இடது சாரி இயக்க தோழர் ஒருவர், ஜல்லிக்கட்டு விவகாரம் காளைகள் சம்பந்தப்பட்ட விவகாரம் மட்டுமல்ல , விவசாயிகளின் வாழ்வாதாரம் , விவசாயம் , காளையினங்களின் பாதுகாப்பு , லட்சக்கணக்கான கோடி ரூபாய் புரளும் பால் உற்பத்தி தொழிலை ஆதிக்கம் செலுத்த நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணம், அதனால் வரும் பண்பாட்டு அழிப்பு ,தமிழக விவசாயமே அழியும் நிலை இது பற்றி எல்லாம் நாம் சொல்ல தேவை இல்லை.

அதை உலகத்துக்கே பாடம் எடுக்கும் கலை கற்றவர்கள் இயக்கம் இது போன்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக தன்னெழுச்சியாக் கொதித்தெழும் ஒரு போராட்ட களத்தில் ஓரம்நின்று வேடிக்கை பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

பின்னர் அவரே சொன்னது சாணிப்பால் , சவுக்கடிக்கு எதிராக உறுதியுடன் போராடி உழவர் உரிமையை மீட்டெடுத்த இயக்கம், வீர வெண்மணி தியாகிகளை கொண்ட இயக்கம் என்ற நிலைக்கு உரிமையாளர்கள் இதுபோன்ற தற்போதைய நிலை வலதுசாரி அரசியல் சக்திகள் வலுப்பெறவே உதவும் என்று தெரிவித்தார்.