என்.பி.ஆர் தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தேசிய மக்கள்தொகை பதிவேடு என்.பி.ஆர் தயாரிப்பு குறித்த சில அச்சங்கள் போக்கப்படும் வரை  அதற்கான கணக்கெடுப்பு நடத்தப்படாது என்று தமிழக அரசும், என்.பி.ஆர் கணக்கெடுப்பில் ஐயத்திற்கு இடமானவர்கள் என எவரும் அறிவிக்கப்படமாட்டார்கள் என மத்திய அரசும்  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

என்.பி.ஆர் தயாரிப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும்,  நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். என்.பி.ஆர் தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும்.

ஒரு கோடிக்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பெரு நகரங்களில் மகளிருக்கென  தனி பிங்க் நிற பேருந்துகள் விடப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பணி/ பள்ளிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அனைத்து சிறிய நகரங்களுக்கும் இந்த சேவையை நீட்டிக்க வேண்டும். ஹரியானாவில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் உள்ளாட்சிகளே வழங்கும் வகையில் அவற்றின் அதிகார வரம்பை உயர்த்தி சட்டத் திருத்தம் நிறைவேற்றம். உள்ளாட்சிகளை உண்மையான சிறிய குடியரசுகளாக மாற்றும் இம்முயற்சியை பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.