Asianet News TamilAsianet News Tamil

காமராசர் பல்கலை. விவகாரம்.. சமூகநீதிக்கு எதிரான செயலை தமிழக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது..? ராமதாஸ் கேள்வி

காமராசர் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு மட்டும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதாக அறிவித்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. இதற்காக காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விளக்கம் எந்தவகையிலும் ஏற்க முடியாததாகும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Ramadoss urges tamilnadu government to roll back reservation in mku
Author
Tamilnádu, First Published Jun 12, 2022, 3:27 PM IST

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,”மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் (எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி) படிப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலையில், அது திணிக்கப்படுவது சமூக அநீதியாகும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை கடைபிடிக்கப்படும் என்றும், 10% இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் ஆன்லைன் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களுக்கு தமிழக அரசு தான் நிதியுதவி வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில், காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசின் 69% இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், காமராசர் பல்கலைக்கழகம் ஒரு குறிப்பிட்ட படிப்புக்கு மட்டும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதாக அறிவித்திருப்பதை நியாயப்படுத்த முடியாது. இதற்காக காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விளக்கம் எந்தவகையிலும் ஏற்க முடியாததாகும்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரு வகையான முது அறிவியல் உயிரிதொழில்நுட்பவியல் படிப்புகள் நடத்தப்படுவதாகவும், மாநில அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 20 இடங்கள் கொண்ட படிப்புக்கு மாநில அரசின் இட ஒதுக்கீடும், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் 30 இடங்கள் கொண்ட படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீடும் கடைபிடிக்கப்படுவதாகவும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் கூறப்படுகிறது. இது தமிழக அரசின் சமூகநீதிக் கொள்கைக்கும், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கும் எதிரானதாகும். சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களால் இதை ஏற்க முடியாது.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியில் ஒரு படிப்பு நடத்தப்படுகிறது என்பதாலேயே, அந்த படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு ஏதோ ஒரு வகையில் நிதியுதவி வழங்குகிறது. அதற்காக அந்தப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் மத்திய அரசின் 60% நிதியுதவியுடன் அமைக்கப்பட்டன. அதற்காக அந்த மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாநில அரசின் இட ஒதுக்கீடு தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை பல்கலை. உணர வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டு வந்த இரு எம்.டெக் படிப்புகளுக்கு உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ''மத்திய அரசு ஏதோ இரு படிப்புகளுக்கு மட்டும் தான் நிதியுதவி வழங்குகிறது. அதைத் தவிர பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பும் மாநில அரசின் நிதியைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக பல்கலைக்கழகங்கள் செயல்படக் கூடாது'' என்று கண்டனம் தெரிவித்தது. 

அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கைவிட்டு, மாநில அரசின் 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடித்து வருகிறது. இவ்வளவுக்குப் பிறகும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிப்பது சமூகநீதிக்கு எதிரான திட்டமிட்ட சதிச்செயல் ஆகும். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இந்த சமூகநீதிக்கு எதிரான செயலை தமிழக அரசு எவ்வாறு அனுமதிக்கிறது என்பது தான் தெரியவில்லை. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு காமராசர் பல்கலைக்கழகத்தில் அனைத்து படிப்புகளுக்கும் 69% இட ஒதுக்கீடு மட்டுமே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களில் இது போன்ற இட ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்து அவற்றையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.'' என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா.. லட்சகணக்கான பக்தர்கள் புனித நீராடல்..

Follow Us:
Download App:
  • android
  • ios