திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழா முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள்‌ கடலில்‌ புனித நீராடி சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌. 

தமிழ்க்கடவுள்‌ முருகப்பெருமானின்‌ ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத்‌ திருவிழா வசந்த விழாவாக இந்த மாதம்‌ 3-ஆம்‌ தேதி தொடங்கி பத்து நாள்கள்‌ நடைபெற்றது. விழாவின்‌ பத்தாம்‌ நாள்‌ நிறைவையொட்டி இன்று வைகாசி விசாகத்‌ திருவிழா நடைபெற்றது. விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில்‌ அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம்‌, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்‌, காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம்‌ மற்றும்‌ தீபாராதனை நடைபெற்றது. 

அதன் பின்னர்‌ முருக பெருமான் தங்கச்‌ சப்பரத்தில்‌ எழுந்தருளி வசந்த மண்டபம்‌ சேர்ந்தார்‌. அங்கு மாலையில்‌ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம்‌ வரும்‌ வைபவமும்‌, விழாவின்‌ முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம்‌ அளிக்கும்‌ வைபவமும்‌ நடைபெற்றது.

பின்னர்‌ மகா தீபாராதனை காட்டப்பட்டு, தங்கச்சப்பரத்தில்‌ சுவாமி , வள்ளி, தெய்வானையுடன்‌ எழுந்தருளி கிரிவீதி வலம்‌ வந்தார். இதனையடுத்து வைகாசி விசாகத் திருவிழா நிறைவு பெற்றது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. இதனால்‌ நிகழாண்டில்‌ விசாகத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை லட்சகணக்கான பக்தர்கள்‌ கடலில்‌ புனித நீராடி சுவாமி தரிசனம்‌ செய்தனர்‌.

மேலும் படிக்க: இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் கொட்ட போகிறது.. வானிலை அப்டேட்