எம்பி தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாமக இன்னும் யாருடன் கூட்டணி என்பதை சொல்லவில்லை. ஆனால்  யூகங்கள் அடிப்படையில் பாமக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற பேச்சுகள் அடிபட்டது.

ஆனால் யாருடன் கூட்டணி என்பதை பற்றி நான்தான் சொல்லுவேன் என்று தெரிவித்த ராமதாஸ், ஊடகங்கள் எதுவும் தன்னிச்சையான கருத்துக்களை இது சம்பந்தமாக திரித்து சொல்ல வேண்டாம் என்றும்  ராமதாஸ் கருத்து கூறியிருந்தார்.

நாடாளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிக்கை மார்ச் மாதம் முதல் வாரத்தில்தான் வெளியிடப்படும். அதன்பிறகுதான் தேர்தல் கூட்டணி மற்றும் களப்பணிகள் தீவிரமடையும். மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பா.ம.க. கூட்டணி அமைத்துதான் போட்டியிடும் என்று பொதுக்குழுவில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து முடிவெடுக்கவும், அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் இன்னும் 40 நாட்களுக்கு மேல் உள்ளன. இந்த விஷயத்தில் அவசரப்படவோ பதற்றப்படவோ தேவை இல்லை.

ஊடகங்கள் கூட்டணி குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலை கற்பனையாக வெளியிட்டுவருகின்றன. என்னைத் தவிர்த்து பாமக தலைவர்கள் மற்ற தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் மீண்டும், மீண்டும் கூட்டணி பற்றி யூகங்களின் அடிப்படையிலே ஊடகங்கள் வினா எழுப்புகின்றன. கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது கூட்டணி குறித்து எந்தத் தகவலை, யார், எப்படி கூற முடியும் என்பதை யாரும் சிந்திக்கவில்லை.

கூட்டணி குறித்து பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் முடிவெடுக்கத்தான் போகிறது. நாங்கள் கூட்டணி முடிவு செய்யும் முன்பாகவே ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுவதும் அவற்றின் அடிப்படையில் விவாதங்களை நடத்துவதும் எந்த வகையிலும் நியாயமில்லை; அறமில்லை.

ஊடக நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுக்கிறேன். ‘‘ ஊடக நண்பர்களே, எப்போதும் நான்காவது தூணாக செயல்படுங்கள். ஒருபோதும் நெறி பிறழ்ந்து செயல்படாதீர்கள்!’’ அதாவது நீங்களாகவே கூட்டணி பற்றி குண்டு போடவேண்டாம் என சொன்னார்.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ்  இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்து போட்டுள்ளார் அதில், "கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தே தீரும். - முன்னோர்கள் சொன்னது" என பதிவிட்டிருந்தார். அதாவது கூட்டணி பற்றி பேசினார் அதற்கான அறிவிப்பை நாங்களே வெளியிடுவோம் நீங்களாகவே ஒரு முடிவெடுக்க வேண்டாம் என சொன்னதாகவே தெரிகிறது. அதாவது கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட முடிவாகியே உள்ளது. ஆனால் யாருடன் என பேச்சுவார்த்தை முடிந்த பின்பே தெரியவரும் எனக் கூறியுள்ளார்.