Asianet News TamilAsianet News Tamil

பாமகவை கலாய்ப்பவர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் பெரிய விளக்கம் கொடுத்த ராமதாஸ்...

கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டது உண்மைதான், இனிவரும் காலங்களிலும் பாமக செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பாமக விட்டுக் கொடுக்காது என ராமதாஸ் கலாய்ப்பவர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் பெரிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

Ramadoss Statements for Alliance with admk
Author
Chennai, First Published Feb 19, 2019, 8:04 PM IST

கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டது உண்மைதான், இனிவரும் காலங்களிலும் பாமக செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பாமக விட்டுக் கொடுக்காது என ராமதாஸ் கலாய்ப்பவர்களுக்கும், விமர்சிப்பவர்களுக்கும் பெரிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் பாமக எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

Ramadoss Statements for Alliance with admk

தமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பது தான் 2011 ஆம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடாக இருந்து வந்தது. எனினும், இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கோவையில் நடைபெற்ற பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில், ''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவலநிலைகளுக்கெல்லாம் காரணம் மாநிலங்களின் உரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு மக்களவையில் போதிய வலிமையில்லாதது தான். பாமகவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த போது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் கடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது.

பாமகவினர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், ரயில்வே துறை இணை அமைச்சராகவும் இருந்த போது தமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை. மத்திய அரசில் பாமக வலிமையாக இருந்தபோது ஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில் ராமதாஸ் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.

Ramadoss Statements for Alliance with admk

இவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பாமக மக்களவையில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான். இதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை பாமக வகுத்து வருகிறது. இதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாமக புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு தீர்மானிக்கிறது. கூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸூக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது'' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர்  எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, தமிழகத்தின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், பாமகவின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளக்கூடாது ஆகிய மூன்றும் தான் மிக முக்கியக் காரணிகளாக அமைந்தன.

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி பாமக தான். நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் பாமகவின் தலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக இருந்தது.

Ramadoss Statements for Alliance with admk

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று 2011 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில் ஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? ஆகிய கேள்விகள் எழுந்தன.

2011 ஆம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து மக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க முடியாமலும், தமிழகத்திற்கு தேவையான  திட்டங்களை போராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா? அல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக சமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட  இரு கட்சிகளின் ஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்கப் போகிறோமா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.

மிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும், கூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக இருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.

அடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன் கூட்டணி? என்பதைத் தீர்மானிக்க வேண்டியிருந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப் போராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில் பெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்? என்ற கேள்விக்குக் கிடைக்கும் விடை தான், யாருடன் கூட்டணி என்ற கேள்விக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக இருந்தேன். 

Ramadoss Statements for Alliance with admk

2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன் கருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார். அவர் மத்திய அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில் அதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும் காஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம், நெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டன.

ஆனாலும், மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், அது கடந்த 10 ஆண்டுகளில், இப்போது கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட பெரிய உச்சநிலை மருத்துவ மையமாக உருவெடுத்திருக்கும்.

அதேபோல், சென்னையில் ரூ.150 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம்,  ரூ.50 கோடியில் மெட்ரோ  ரத்த வங்கி, ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இரு ஆண்டுகள் நீடித்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றில் பல திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன.

பாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தபோது அவர்களுக்கு நான் பிறப்பித்திருந்த கட்டளை, தமிழகத்தில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர்கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது’’ என்பது தான். அதைப்போலவே, அனைத்துப் பாதைகளையும் அகலப் பாதைகளாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு பாமக அமைச்சர்கள் ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டது.

Ramadoss Statements for Alliance with admk

ஆனால், 2009 ஆம் ஆண்டு ரயில்வே  இணையமைச்சர் பதவியிலிருந்து அரங்க.வேலு விலகிய பின்னர் தமிழகத்திற்கான ரயில் திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. 2009-14 காலத்திலும் திமுக மத்திய அமைச்சர் பதவியில் நீடித்த போதிலும் அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத் தரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை. இக்காலத்தில் ரயில்வே துறையில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்தது.

அதிமுக மீது விமர்சனங்களே இல்லையா? என்று கேட்டால் 'இல்லை' என்று பதிலளிக்க முடியாது. ஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாமக முன்வைத்த பல்வேறு யோசனைகளை அதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை  செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது, பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது, கடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக்கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தது, காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாமக சார்பில் முன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளது.

Ramadoss Statements for Alliance with admk

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. மத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும் போராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பாமகவும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த ஒருங்கிணைப்பு  தமிழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாமக நம்புகிறது.

கூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படி, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பாமக தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாமக பாடுபடும். அதேநேரத்தில் பாமக அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது. கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாமக செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பாமக விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios