ஓட்டளிப்பதில் ஆர்வம் காட்டாதது சரியா என்பதை, அவர்களின் மனசாட்சி தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தலில் ஓட்டுப் போடாதவர்கள், தங்கள் செயலை, எந்த வகையிலும், நியாயப்படுத்தவே முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில், 71.90 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. நான்கில் ஒரு பங்குக்கும், கூடுதலான வாக்காளர்கள், தங்களின் விலை மதிப்பற்ற வாக்குரிமையை, செலுத்த தவறியதை, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.

ஊரகப் பகுதிகளில், ஓட்டுப்பதிவு அதிகமாக இருப்பது, கிராமப்புற மக்களிடம், ஓட்டளிக்கும் ஆர்வமும், துடிப்பும், அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பட்டியலில், தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், வட சென்னை தொகுதிகள், முன்னணியில் உள்ளன. அதேபோல், கோவை, மதுரை மாநகரத் தொகுதிகளிலும், குறைந்த ஓட்டுகள் பதிவாகி இருப்பது, பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.

வசதிகளை அனுபவிக்காத ஊரக மக்கள், அதிகம் ஓட்டளிக்கும்போது, அதிநவீன வசதிகளை அனுபவிக்கும் நகர்ப்புறங்களில், பெரும்பான்மையினர், ஓட்டளிப்பதில் ஆர்வம் காட்டாதது சரியா என்பதை, அவர்களின் மனசாட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.
தேர்தலில் ஓட்டுப் போடாதவர்கள், தங்கள் செயலை, எந்த வகையிலும், நியாயப்படுத்தவே முடியாது. 

ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து, சமூக வலைதளங்களில், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் புரட்சியாளர்கள், வெயிலுக்கு கூட, ஓட்டுச்சாவடி பக்கம் ஒதுங்காதது, முரண்பாடுகளின் உச்சம்.மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை, நுாறு சதவீதம் மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்காவிட்டால், அது முழுமையான ஜனநாயகமாக இருக்காது. ஜனநாயகம், நமக்கு அளித்திருக்கும், அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நாம், ஓட்டு செலுத்துவதற்கு மட்டும் மறுப்பது, மிகப்பெரிய கடமை தவறுதலாக பார்க்கப்பட வேண்டும்.

உலகில், 38 நாடுகளில், ஓட்டளிப்பது கட்டாயம். அதேபோல், இந்தியாவிலும் கட்டாயமாக்க வேண்டும் என்ற, குரல்கள் ஒலிக்கின்றன. நாட்டின், எந்தப் பகுதியிலும் ஓட்டளிக்கலாம் என்பது உள்ளிட்ட, சீர்திருத்தங்களை செய்வதன் வழியே, இதை சாத்தியமாக்க முடியும்.இந்தியாவில், ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது குறித்த, பொது விவாதத்தை, தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.