Asianet News TamilAsianet News Tamil

அதிகார போதை கொடுக்கும் மயக்கத்தில் அட்டூழியம் பண்ணாதீங்க... அழிவு நெருங்குகிறது! ஆளும் தரப்பை அல்லு தெறிக்கவிடும் ராமதாஸ்...

Ramadoss statements against 8 way road project
Ramadoss statements against 8 way road project
Author
First Published Jul 14, 2018, 2:55 PM IST


சென்னையிலிருந்து சேலம் வரையிலான 8 வழிச்சாலை அமைப்பதற்கான முன்னேற்பாடுகளுக்காக தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டு வருகின்றனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை  மிரட்டியும், அப்புறப்படுத்தியும் காவல்துறையினர் அத்துமீறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

பசுமைச்சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகளை திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி,  சேலம் மாவட்டங்களில் நிறைவு செய்து விட்ட அதிகாரிகள், இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள், நீர்ப்பாசனக் கிணறுகள் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளன. சில இடங்களில் சாலை செல்லும் வழியும், அகலமும் துல்லியமாக தெரியாத நிலையில் அதிகாரிகள் உத்தேசமாக நிலங்களை அளவீடு செய்து கற்களை நட்டு வருகின்றன. தேவையே இல்லாத இடங்களில் கூட நிலங்கள் அளவீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுமக்களை காவல்துறையினர் கண்மூடித்தனமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்துகின்றனர். நில அளவீட்டுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று காவல்துறையினர் மிரட்டுகின்றனர். இவை மிகக்கடுமையான மனித உரிமை மீறல் ஆகும். தாயாகவும், தெய்வமாகவும் மதித்துக் காப்பாற்றி வந்த நிலங்களையும், குழந்தையாக கவனித்து வந்த பயிர்களையும் இழக்க மனம் வராமல் விவசாயிகள் தங்களின் நிலங்களில் உருண்டு புரளும் காட்சிகள் காண்போரின் இதயங்களை உலுக்குகின்றன. ஆனால், இதையெல்லாம் உணர்ந்து கொள்ளும் ஈரமோ, இரக்கமோ ஆள்வோரின் இதயங்களில் இல்லை; அவை கற்களாக மாறிவிட்டன.

எந்த வகையில் பார்த்தாலும் சென்னை- சேலம் இடையிலான பசுமைவழிச் சாலையை நியாயப்படுத்த முடியாது. இந்த சாலை தேவையற்ற ஒன்று என்பதை ஏற்கனவே பலமுறை ஆதாரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி விளக்கியிருக்கிறது. சென்னை- சேலம் இடையே இப்போதுள்ள இரு தேசிய நெடுஞ்சாலைகள் அடுத்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கக்கூடிய போக்குவரத்து நெரிசலை தாங்கும் தன்மை கொண்டவை என்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றையும் தாண்டி புதிய சாலை அமைக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள்  விரும்பினால், சென்னையிலிருந்து வாணியம்பாடி வரை இப்போதுள்ள ஆறு வழிச் சாலையை பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர், மஞ்சவாடி, அயோத்தியாப் பட்டினம் வழியாக சேலம் செல்லும் மாநில சாலையை 6 வழிச் சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ விரிவுபடுத்தலாம்; இதற்காக பெரிய அளவில் நிலம் கையகப்படுத்த வேண்டியிருக்காது; அதுமட்டுமின்றி, பசுமை சாலையை விட குறைந்த நேரத்தில் சென்னையிலிருந்து சேலத்திற்கு செல்ல முடியும் என்பதை விரிவான புள்ளி விவரங்களுடன் பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. ஆனால், இவ்வளவுக்குப் பிறகும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்; பசுமைச்சாலை திட்டத்தை தான் செயல்படுத்துவோம் என முதலமைச்சர் பிடிவாதம் பிடிப்பதன் பின்னணியில் இருப்பது மக்கள் நலன் அல்ல... சுயநலம் தான்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கு நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எப்போதுமே இரண்டாவது கருத்து இருந்ததில்லை. 2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே சாலைகள் மேம்பாட்டுக்கு பா.ம.க. எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால், தேவையில்லாத சாலைக்காக 15,000 குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழும் நிலங்களைப் பறிப்பது வளர்ச்சிக்கான செயலாக இருக்காது; அழிவுக்கான அடித்தளமாகவே அமையும் என்பது உறுதி.

பசுமைச்சாலை தேவையா? என்பது குறித்த பகுத்தறிவும், அச்சாலை அமைக்கப்படவுள்ள பகுதிகளில்  நிலத்தை இழக்கப்போவதை தாங்கிக் கொள்ள முடியாமல் கதறி அழும் விவசாயிகள் சிந்தும் கண்ணீரின் வலிமையை உணரும் சக்தியும் இருந்தால் அழிவுக்கான இந்த சாலைத்திட்டத்தை ஆட்சியாளர்கள்  கைவிட்டிருப்பார்கள். ஆனால், அதிகார போதை கொடுக்கும் மயக்கமும், பசுமைச்சாலைத் திட்டத்தால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்கும் பயன்களின் காரணமாகவும் எப்படியாவது பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தி விட வேண்டும் என்று  முதலமைச்சர் துடித்துக் கொண்டிருக்கிறார். தமிழக ஆட்சியாளர்கள் காட்டும் இந்த அகங்காரத்தின் உச்சம் அவர்களின் அழிவுக்கு தொடக்கம் என்பதை சம்பந்தப்பட்டவர் உணர வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து சென்னையிலிருந்து சேலம் இடையிலான பசுமைச் சாலை திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட வேண்டும் என இவ்வாறு கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios