Asianet News TamilAsianet News Tamil

தனியார் பள்ளிகள் செய்யும் துரோகத்தை மன்னிக்கவே முடியாது..! கொந்தளிக்கும் ராமதாஸ்..!

தமிழ்நாட்டில் 624 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. மற்ற பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் ஆகும். அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு பெருந்தொகையான மாணவர்கள் தமிழை படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதை அனுமதிக்க கூடாது.

ramadoss statement about private schools
Author
Vellore, First Published Mar 17, 2020, 1:10 PM IST

தமிழகத்தில் தமிழ் மொழியை கற்பிக்காத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தமிழை கட்டாயப்பாடம் ஆக்குவதற்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் கூட, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தை கடைபிடிக்கும் தனியார் பள்ளிகள் தமிழ் மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கின்றன. தமிழ் மொழிக்கு தனியார் பள்ளிகள் செய்யும் இந்த துரோகம் மன்னிக்க முடியாததாகும். தமிழகத்தின் அண்டை மாநிலங்களாக ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் உட்பட இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் கட்டாயப் பாடமாக்கப் பட்டுள்ளன. அங்குள்ள மாநிலக்கல்வி வாரிய பாடத்திட்ட பள்ளிகளில் மட்டுமின்றி, சி.பி.எஸ்.இ, இந்திய இடைநிலை கல்விச் சான்றிதழ் பாடத்திட்டம், இந்திய பள்ளித் தேர்வு சான்றிதழ் குழு பாடத்திட்டம், கேம்பிரிட்ஜ் வாரியப் பாடத்திட்டம் ஆகிய பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளிலும் மாநில மொழிப் பாடம்  கட்டாயமாகும்.

ramadoss statement about private schools

மாநில மொழிப் பாடத்தை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கவும் அந்த மாநிலங்களின் உள்ளூர் மொழி கட்டாயப்பாட சட்டம் வகை செய்கிறது. உதாரணமாக கேரளத்தில் உள்ள எந்த கல்வி வாரிய பள்ளிகளாக இருந்தாலும், மலையாளத்தை கட்டாயப் பாடமாக கற்பிக்கத் தவறினால் முதல் இரு முறை எச்சரிக்கையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும். மூன்றாவது முறையும் மலையாள மொழிப் பாடத்தை கற்பிக்கத் தவறும் பள்ளிகளின்  அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கேரள அரசு எச்சரித்திருக்கிறது. அதேநேரத்தில் மலையாளத்தை கட்டாய பாடமாக கற்பிக்கும் பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல சலுகைகளும்  வழங்கப்படுகின்றன.

7 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலி..! அதிர்ச்சியில் உறைந்த உலக நாடுகள்..!

ramadoss statement about private schools

தமிழ்நாட்டிலும் இத்தகைய தண்டனை மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்தி அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் கட்டாயமாக கற்பிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 624 சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்ளன. மற்ற பாடத்திட்டங்களை கடைபிடிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் ஆகும். அந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் ஆகும். தமிழ்நாட்டில் இவ்வளவு பெருந்தொகையான மாணவர்கள் தமிழை படிக்காமல் பள்ளிப்படிப்பை நிறைவு செய்வதை அனுமதிக்க கூடாது. எனவே, தமிழகத்திலுள்ள சி.பி.எஸ்.இ மற்றும் பிற கல்வி வாரிய பள்ளிகள் தமிழை கட்டாய பாடமாக கற்பிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

திமுக பொதுச்செயலாளர் தேர்வு நிறுத்திவைப்பு..!

Follow Us:
Download App:
  • android
  • ios